டி.டி.வி. தினகரனை விமர்சித்து புகழேந்தி பேசியதாக வீடியோ வெளியான நிலையில் அமமுக செய்திதொடர்பாளர்கள் பட்டியலில் இருந்து புகழேந்தியின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க.வில் கர்நாடக மாநில பொறுப்பாளராக இருந்த புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். இதனிடையே, அமமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை புகழேந்தி தனியார் ஓட்டலில் நேரில் சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்த வீடியோ கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், டி.டி.வி.தினகரனை அடையாளம் காட்டியதே தான். ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை என புகழேந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இது அமமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இதுதொடர்பாக புகழேந்தி கூறுகையில், நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவிக்கவே நான் அவர்களை சந்தித்தேன். இதை தவறாக எடுத்து அமமுக தொழில்நுட்ப பிரிவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. எனக்கு தெரியாமல் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது என்றார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி.தினகரன் கூறியிருந்தார். 

இந்நிலையில், அமமுக செய்தித் தொடர்பாளர்களின் புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல், முன்னாள் அமைச்சர் வெற்றிவேல் மற்றும் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 14 பேர் கொண்ட பெயர் பட்டியல்இடம்பெற்றுள்ளது.

ஆனால் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அமமுகவில் இருந்து அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆகையால், விரைவில் அமமுகவில் இருந்து விலகி தாய் கழகத்தில் இணைவாரா? அல்லது பாஜக கட்சியில் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.