சசிகலாவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வந்த அமமுகவின் செய்திதொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்து. இதனால், மன்னார்குடி உறவுகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அமமுக மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு அக்கட்சியில் இருந்து ஏராளமான முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்த வண்ணம் இருந்தனர். அப்படி இருந்த போதிலும் சசிகலா மீது இருந்த விசுவாசத்தால் டிடிவி.தினகரன் கட்சியில் புகழேந்தி இருந்துவந்தார். இதனிடையே, சமீபத்தில் அமமுகவில் புதிய மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், அமமுகவில் தனக்கு மிகப்பெரிய பதவி கிடைக்கும் கனவு கோட்டை கட்டியிருந்த புகழேந்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், டிடிவி.தினகரன் மீது புகழேந்தி கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். 

இந்நிலையில், புகழேந்தி டி.டி.வி. மீதான அதிருப்தி காரணமாக கட்சியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை புகழேந்தி தனியார் ஓட்டலில் நேரில் சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், டிடிவி.தினகரனை அடையாளம் காட்டியதே தான் என புகழேந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இது அமமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி பேசியது உண்மை என, ஒப்புக்கொண்ட புகழேந்தி, அதை, அ.ம.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தியதாக, குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் டிடிவி.தினகரன் கண்டிப்புடன் கூறியிருந்தார். 

இதனால், அ.ம.மு.க.,வில் நீடிக்க முடியாத நிலைமை, புகழேந்திக்கு தள்ளப்பட்டுள்ளார். எனவே, அவரை, தி.மு.க.,வில் இழுக்க செய்தில்பாலாஜி மற்றும் தங்க தமிழ்செல்வன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், புகழேந்தி, கர்நாடகாவில் தீவிர அரசியல் செய்ய விரும்புவதாக தகவல் தெரிவிக்கின்றன. எனவே இவற்றையேல்லாம் கருத்தில் கொண்டு கர்நாடகா அரசியலில் ஈடுபடும் விதமாக, அங்கு ஆட்சி செய்யும், பாஜகவில் இணைய விரும்புவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. 

இதற்கிடையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க, புகழேந்தி விரும்புகிறார். அவரை சந்தித்து, தினகரன் செயல்பாடுகள் பற்றி புகார் கூற திட்டமிட்டு உள்ளார். அதன்பின், தன் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். இதனால், மன்னார்குடி குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.