நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மற்ற அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால் டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர், கமல்ஹாசன் துவங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி ஆகியவை கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டன.

இக்கட்சிகள் திராவிடக் கட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்து தேர்தல் பிரசாரம் செய்தன. இக்கட்சிகள் கணிசமான அளவில் வாக்குகளைப் பெறும் என்ற எண்ணம் நிலவியது. குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் இக்கட்சி நிர்வாகிகள் சூளுரைத்தனர்.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இக்கட்சிகளுக்கு முடிவுகள் பலத்த சோர்வையே ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 39 தொகுதிகள் திமுக கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

வாக்குகளைப் பொறுத்தவரை அமமுக பல இடங்களில் 3ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் மாற்றி மாற்றி 4, 5ம் இடங்களையும் பெற்றுள்ளன. எனினும் இக்கட்சிகள் டெபாசிட் இழக்காத அளவுக்கு வாக்குகளைப் பெறுமா என்பதே இப்போதைய நிலையில் கேள்விக்குறியாக உள்ளது.