அரசியல் கட்சியாக பதிவு செய்யாதாதால் டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

இரட்டை இலை வழங்கப்பட்டதை எதிர்த்து தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர் இடைக்கால மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அதில், இரட்டை இலை சின்னம் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை தனக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும் படி கோரியிருந்தார். இதையடுத்து, அவருடைய கோரிக்கையை ஏற்று குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்கீடு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உத்தரவை எதிர்த்து அதிமுக தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  

மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க பிறப்பித்த ஆணைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை சின்னத்தை  தினகரன் தலைமையிலான அணி பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, கட்சி பதிவு செய்யப்படாததால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதனையடுத்து இன்று நடைபெற்ற விசாரணையில், டிடிவி தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதங்களை தொடங்கினார். அப்போது,  அமமுகவுக்கு முதலில் குக்கர் சின்னத்தை கொடுத்தது யார்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் அதிகாரி குக்கர் சின்னத்தை அளித்தார் என கபில் சிபில் கூறினார். இன்றைக்கே அமமுகவை கட்சியாக பதிவு செய்கிறோம்; குக்கர் அல்லது வேறு ஒரு பொதுச்சின்னம் தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

குக்கர் சின்னம் அல்ல எந்த ஒரு பொது சின்னத்தையும் டி.டி.வி.தினகரன் கட்சிக்கு கொடுக்க முடியாது. அமமுகவை இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொதுசின்னத்தை உடனே தர முடியாது என தேர்தல் ஆனையம் கூறியது. குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட்டால் அது சட்டப்பிரிவு 29A-வுக்கு எதிராக இருக்கும். உங்கள் அணி அப்பிரிவுக்கு உட்படாமல் இருந்தால், எப்படி சின்னம் வழங்க முடியும்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தலைமை நீதிபதி  இரட்டை இலை தொடர்பான வழக்கு இருந்த காரணத்தால், டில்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கியது. அதே சின்னத்தை தான் மீண்டும் கேட்கிறோம் என டி.டி.வி தரப்பு கோரிக்கை வைத்தது. பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் வழங்கியது பிரநிதித்துவ சட்டப்படி முரணானது, பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுச்சின்னத்தை ஒதுக்க முடியும்? என
தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சுயேட்சை வேட்பாளருக்கான சின்னத்தை பெற்றுக்கொள்ளுங்கள். டிடிவி தினகரன் தரப்புக்கு தனி தனி சின்னம்தான் தர முடியும்; பொதுசின்னம் தர முடியாது என தேர்தல் ஆணியம் திட்டவட்டமாக கூறியது.  டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கலாமே? ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். ஆனால், அமமுகவை இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொது சின்னத்தை உடனே தர முடியாது என தேர்தல் ஆணையம் கூறியது. 

இறுதியில் இது குறித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமமுக பதிவு செய்யப்படாத அரசியல் கட்சியாக இருப்பதால் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தீர்ப்பளித்தார்.