பதவி நாற்காலி மீது மட்டுமே கவனம்... முதல்வரை வசைபாடிய டிடிவி தினகரன்!
மேட்டூர் அணையைத் திறக்கத் தண்ணீர் இல்லாத நிலையில், கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெற துரும்பைக்கூட கிள்ளிப்போடாமல் பழனிச்சாமி அரசு மௌனம் காப்பது வேதனை.
பதவி நாற்காலியைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக்கொள்வதில் மட்டுமே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனம் செலுத்தி வருகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேட்டூர் அணையைத் திறக்கத் தண்ணீர் இல்லாத நிலையில், கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெற துரும்பைக்கூட கிள்ளிப்போடாமல் பழனிச்சாமி அரசு மௌனம் காப்பது வேதனை. பாசனத்துக்காக ஒவ்வொரு ஜூன் மாதமும் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது மரபு. அதன்படி இன்று அணையைத் திறக்க தண்ணீர் இல்லை.
தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் அந்த மாநிலம் வழக்கம் போலவே சண்டித்தனம் செய்கிறது. இதனால் மேட்டூர் அணை மூலம் பாசனம் பெறும் டெல்டா உள்பட 12 மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் சாகுபடிப் பணிகளை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து நிற்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் தற்போது கடுமையான குடிநீர்ப்பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அல்லாடுகிறார்கள். தலைநகர் சென்னை உள்பட பல மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல், காவிரி நீரைப் பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பதவி நாற்காலியைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொள்வதில் மட்டுமே பழனிச்சாமி கவனம் செலுத்திவருகிறார்.
தண்ணீரை வாங்கிக் கொடுத்து விவசாயத்தைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக வேளாண்மையை அழிக்கும் எண்ணெய்க் குழாய் - எரிவாயுக் குழாய்கள் பதித்தல், எட்டு வழிச்சாலை போடுதல், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதில் மக்கள் விரோத பழனிச்சாமி அரசு வேகம் காட்டிவருகிறது.
காவிரி தண்ணீரில் தமிழகத்தின் பங்கு என்பது 'மரபு வழிப்பட்ட உரிமை’. அந்த அடிப்படையில் வறட்சிக் காலத்துக்குரிய நீர்ப்பகிர்வு வழிமுறைப்படி தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை பழனிச்சாமி அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.