வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் முன்னாள் அரசு கொரடா மனோகரன் ஸ்ரீரங்கம் தொகுதியில போட்டியிடப்போவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.

திண்டுக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே ஊழலில் முதலிடம் பெற்ற மாநிலமாகத்தான் தமிழகம் திகழ்கிறது என  சாதாரண மக்களை கேட்டால் கூட சொல்லுவார்கள். ஆனால் இதனை  பாஜக தலைவர் அமித்ஷா வந்து சொல்வேண்டியுள்ளது என தெரிவித்தார்..

தமிழகத்தில் லோக்பால் கொண்டு வருவது என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பாகும். பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேர வைக்கும் தேர்தல் வரும். அப்போது மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி தமிழகத்தில் மலரும். அப்போது உண்மையான லோக்பால் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்படும் எனவும் தினகரன் தெரிவித்தார்.

இதையடுத்து  ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் செல்லும்போது அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய டி.டி.வி.தினகரன் பேசும் போது, துரோகத்தை கருவறுக்க வேண்டும் என்பார்கள். அது போலத்தான் இப்போது தமிழகத்தில் நடக்கும் துரோக ஆட்சிக்கு கரு உள்ள முட்டையின் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்றார்

வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சசிகலாவின் ஆசி பெற்ற வேட்பாளர் மனோகரன் போட்டியிடுவார். அரசு தலைமை கொறடாவாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்து மக்கள் பணியாற்றிய அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் ஆட்சி முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.