தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று கடைப்பிடக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016 ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் டிசம்பர் 5ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரின் திடீர் மறைவு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதன்பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில் அவர் மரணமடைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. இதன்காரணமாக அவர் நினைவிடம் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

அதிமுக சார்பாக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் அமமுக நிர்வாகிகளுடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவு படுத்தும் விதமாக காலையில் இருந்து சமூக ஊடங்கங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன. ட்விட்டரில் #AmmaForever, #Jayalalitha என்கிற ஹாஸ்டேக்கள் ட்ரெண்ட் ஆகி இருந்தது.