முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னை அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்தி இருந்த நிலையில், இன்று தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் ஓபிஎஸ் ஆய்வு செய்த பின் இட்லி, பொங்கல் சாப்பிட்டு உணவின் தரத்தை பரிசோதித்தார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றக்கூடாது. சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. 

அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், சந்தைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. நேற்று சென்னை மயிலாப்பூர், சாந்தோம், கலங்கரை விளக்கத்தில் உள்ள  அம்மா உணவகங்களுக்கு முதல்வர் எடப்பாடி திடீர் ஆய்வு நடத்தினார். பின்னர் அங்கு உணவு அருந்த வருபவர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்து, அங்கு இட்லி வாங்கி சாப்பிட்டு உணவின் தரத்தை பரிசோதித்தார். 

இந்நிலையில், தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் உணவின் தரம் பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது இட்லி, பொங்கல் சாப்பிட்டு உணவின் தரத்தை பரிசோதனை செய்தார். அதைத் தொடர்ந்து 28 மளிகைப் பொருட்கள் ரூபாய் 2 ஆயிரத்துக்கு வீடு தேடி வரும் திட்டத்தையும் துணை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் உழவர் சந்தையில் ரூபாய் 150-க்கு காய்கறிகள் பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதையும் ஆய்வு செய்தார்.