Asianet News TamilAsianet News Tamil

MK Stalin: நேரம் கொடுக்காத அமித்ஷா.. பதிலடி கொடுக்க முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில், நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும், இந்தச் சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் பெறப்படுவதில் ஏற்படக்கூடிய காலதாமதம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கக்கூடிய மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள்.

Amitsha did not give time .. Action taken by Chief Minister Stalin to retaliate
Author
Chennai, First Published Jan 6, 2022, 2:36 PM IST

எந்தவொரு நுழைவுத் தேர்வு என்றாலும் அது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும். நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைப்பதாக உள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டை முதல்வர் ஸ்டாலின் விளக்கினார். சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்;- பேரவைத் தலைவர் அவர்களே, ‘எல்லார்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நகரட்டும் இந்த வையம்’ என்ற உன்னதமான குறிக்கோளைக் கொண்டதுதான் இந்த அரசு.  குறிப்பாக, கல்வி என்பதை அடிப்படை உரிமையாகச் செயல்படுத்திக் காட்ட நினைக்கக்கூடிய அரசாகவும் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. எந்தவொரு கல்லூரிச் சேர்க்கையாக இருந்தாலும், அதற்கு வைக்கப்படும் நுழைவுத் தேர்வானது ஏழை எளிய, கிராமப்புற விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக்கும். அதனால் அந்தத் தேர்வுகளைத் தவிர்த்து, பள்ளிக் கல்வித் திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதில் மாற்றமுடியாத உறுதிப்பாடு கொண்டதாக இந்த அரசு இருக்கிறது. அதாவது, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

Amitsha did not give time .. Action taken by Chief Minister Stalin to retaliate

இந்த அடிப்படையில்தான், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் மாநில அளவில் நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வுகளை, 2007 ஆம் ஆண்டு அகற்றி, அதற்காகத் தனிச் சட்டம் இயற்றினார்கள். அச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவருடைய ஒப்புதலையும் பெற்று, கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில், ஏழையெளிய கிராமப்புற மாணவர்களின் நலன் காக்கப்படுவதை உறுதிசெய்தார். இதன் அடிப்படையில்தான், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிலே மருத்துவ மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று, திறன்மிக்க நம் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலக்கூடிய வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது. இத்தகைய மருத்துவர்கள் மூலமாக இன்று மருத்துவத் துறையிலே நம் நாட்டிற்கே முன்னோடியாக நாம் விளங்கிக் கொண்டிருக்கிறோம்.

Amitsha did not give time .. Action taken by Chief Minister Stalin to retaliate

ஆனால், கடந்த காலத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கான திருத்தச் சட்டம், அதன்பிறகு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியன மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன்னிறுத்தி, நமது மாணவர்களை வெகுவாக பாதித்துள்ளன. மாநில அரசு நிதியிலிருந்து, மாநில அரசுகளால் தொடங்கப்படக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில் எவ்வாறு அம்மாநில மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யக்கூடிய உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறித்து விட்டது ஒன்றிய அரசு. இதுமட்டுமன்றி, நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்கு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக் கல்வியால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கி, பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக ஆக்குவதாகவும் இந்த “நீட்’ தேர்வு முறை உள்ளது.

இவ்வாறு மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைப்பதாக மட்டுமல்ல; இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைப்பதாகவும் இந்தச் செயல்கள் அமைந்துவிட்டன. இதனை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. மாணவர்களது எதிர்காலம் பாழாகி வருவதை கண்டும் காணாமல் நாம் இருந்து விடமுடியாது. இதனைச் சரிசெய்து, மாநில உரிமைகளையும் நமது மாணவர்களுடைய நலனையும் மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கத்தோடு இந்த அவையால் ஒருமனதாக 19-9-2021 அன்று ஒரு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டமுன்வடிவு இன்னமும் ஆளுநர் அவர்களால், குடியரசுத் தலைவருடைய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து, ஆளுநர் அவர்களை நானே நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தியிருக்கிறேன்.

Amitsha did not give time .. Action taken by Chief Minister Stalin to retaliate

இதனைத் தொடர்ந்து, கடந்த 28-12-2021 அன்று நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டி.ஆர். பாலு அவர்கள் தலைமையிலே, தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில், நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும், இந்தச் சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் பெறப்படுவதில் ஏற்படக்கூடிய காலதாமதம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கக்கூடிய மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள். பின்னர், அம்மனு மேல் நடவடிக்கைக்காக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக குடியரசுத் தலைவருடைய செயலகத்தின் சிறப்புப் பணி அலுவலர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே, இதுகுறித்து மேலும் வலியுறுத்திட, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்துறை அமைச்சர் அவர்களை நேரிலே சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால், இதுவரையிலே, அவர்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் மறுத்து வருகிறார். மக்கள் பிரதிநிதிகளை மத்திய உள் துறை அமைச்சர் அவர்கள் சந்திக்க மறுப்பது, மக்களாட்சியினுடைய மாண்புக்கு எதிரானதாகும். எட்டரை கோடி தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளையும், நமது மாணவர்களுடைய கனவுகளையும் நிறைவு செய்வதற்கான இந்த அரசின் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். அதற்காகவே இவ்வாறு பல வகைகளில் இந்த அரசு அயராது முயற்சி செய்து வருகின்றது. பல நாட்கள் கடந்தும், உள் துறை அமைச்சர் அவர்கள் நேரிலே சந்திக்க நேரம் ஒதுக்காத நிலையிலே, அவரிடம் கொடுக்கப்பட வேண்டிய மனு, அவரது அலுவலகத்திலே நேற்றையதினம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சமூக நீதியை நிலைநாட்டுவதில் நமது நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டின் வரலாற்றையும், திராவிட இயக்கங்களின் வரலாற்றையும் புரட்டிப் பார்க்கும் போது, நமது வெற்றிகள் அனைத்தும் நீண்ட நெடிய அரசியல், சட்டம் மற்றும் மக்கள் போராட்டங்களுக்குப் பின்னரே கிட்டியிருக்கின்றன. நாமும், நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை இப்போராட்டங்களின் மூலமாகத்தான் நாம் பெற்றுள்ளோம் என்பதை இந்த அவையிலே நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். எனவே, ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான நமது இந்தப் போராட்டத்தையும், நமது சமூகநீதி இயக்கத்தின் அடுத்த கட்டப் போராட்டம் எனக் கருதி, நாம் நமது கொள்கையிலிருந்து எள்முனையளவு கூட பின்வாங்காமல் முன்னெடுத்துச் செல்வோம்.

Amitsha did not give time .. Action taken by Chief Minister Stalin to retaliate

மேற்கூறிய இந்தச் சூழ்நிலையைக் கருத்திலே கொண்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நாம் ஒருமித்த நிலைபாட்டினை எட்டுவதற்கு, நமது சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நாளை மறுநாள், அதாவது, 8-1-2022 அன்று கூட்டுவது என்று முடிவு செய்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று சட்டமன்றக் கட்சிகளுடைய தலைவர்களை நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் சேர்த்து நிறைவேற்றிய தீர்மானம்தான் அது. அதனால், அதன் முக்கியத்துவத்தைக் கருதி, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு எதிரான, சமூக நீதிக்கான நமது போராட்டம் தொடரும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்து அமைகிறேன்.'' என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios