வரும் மே மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவை எப்படியாவது மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கங்கணம் கட்டி பணியற்றி வருகிறார்.

அமித்ஷாவைப் பொறுத்தவரை பிரதமர் மோடிக்கு வலதுகரமாக விளங்குபவர். இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி  அரசியல்வாதி ஆனவர்.  மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது  அங்கு  உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்..

ஆனால் 2010 ஆம் ஆண்டில் அமத்ஷா உத்தரவின் பேரில் குஜராத் மாநில காவல்துறையால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட  என்கவுண்ட்டர் வழக்கு  காரணமாகத் தன் அமைச்சர் பதவியைத் துறந்தார்.

 

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்லின்போது குஜராத் மாநிலத்தின்  தேர்தல் பரப்புரை மேலாளராக நியமிக்கப்பட்டார். இத்தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில்  பாஜக  பெரும் வெற்றி அடைந்ததற்கு அமித் சாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையுமே காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர் பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவரது கடின உழைப்பால் பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கடுமையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அமித்ஷாவுக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி  இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.