தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த 7–ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியின் பின்புறம் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்க கூட்டங்கள் திமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. மதுரை. கோவை, திருச்சி போன்ற நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சிகளின்  நிறைவாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 30–ந் தேதி மாலை 4 மணிக்கு தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் கூட்டம் நினைவேந்தல் கூட்டம் நடைபெற இருக்கிறது.

கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் பாஜக சார்பில் அக் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என திமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்வது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணிக்கு அச்சாரமாக இருக்குமோ? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. புதிதாக திமுக – பாஜக கூட்டணி உருவாகப் போகிறது என பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கபோவதில்லை என முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக சுப்ரமணியன் சுவாமியின் கருத்துக்களை பாஜகவினரே மதிப்பதில்லை. அவர் எது சொன்னாலும் அது அவரது தனிப்பட்ட கருத்து என மற்ற தலைவர்கள் சொல்லி சமாளித்து விடுவார்கள். அதே போன்றுதான் இதுவும் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்..