கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்துகொள்ளவில்லை எனவும் அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வரும் 30ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ”தெற்கில் உதித்தெழுந்த சூரியன்” என்ற தலைப்பில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்க உள்ளது. 

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டது. வாஜ்பாயின் அஸ்திக்கு பாஜக தலைமை அலுவலகத்திற்கே சென்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது, கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பதாக கூறப்பட்டது ஆகிய சம்பவங்கள், பல்வேறு கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்தன. தமிழக அரசியல் களத்தில் கூட்டணி மாற்றம் ஏற்படப்போகிறதா என்றெல்லாம் பேசப்பட்டது. 

இதற்கிடையே, கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை என்ற தகவல் மகிழ்ச்சி அளிப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி போட்ட டுவீட் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், அமித் ஷா கலந்துகொள்வாரா இல்லையா என்பது சந்தேகமாக இருந்துவந்தது. அமித் ஷா சென்னை வருவது தொடர்பாக பாஜக மத்திய தலைமையிடமிருந்து மாநில தலைமைக்கு எந்த தகவலும் வரவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை எனவும் அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.