ஜம்மு - காஷ்மீரை பிரித்து காஷ்மீருக்க்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால், இந்த விவகாரத்தில் அவர்களுக்கு முன்பே இப்படி ஒரு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து ஐடியா கொடுத்துள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

 

ஜம்மு காஷ்மீரில் கடந்த 1984ம் ஆண்டு பரூக் அப்துல்லாவின் ஆட்சி கலைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் காஷ்மீர் பற்றிய சூழல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது குறித்து அன்றைய நாளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அதில், ’’ஒரு மாநிலத்தின் அரசை மத்திய அரசு கலைக்கும்போது, நிச்சயம் அது ஆளும் கட்சிக்கு நெருக்கடியாக அமையும். இதேபோலதான் கடந்த 1980ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது சிக்கல் உண்டானது. இப்போது அதே நிலைமைதான் பரூக் அப்துல்லாவின் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. எனினும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயல்கள் நடந்தால் அதனை எதிர்த்து நடவடிக்கைகள் எடுப்பதுதான் சரியானது. கடந்த 1983ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் குண்டு வெடிப்பு நடந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் பாகிஸ்தான் சுதந்திர் தினத்தின்போது அங்கு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இவை யாவும் இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் சீர்குலைப்பதை போல உள்ளது. இதனை தடுக்க அரசு சில நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகிறது. 

இறுதியாக மத்திய அரசிடம் நான் 2 கேள்விகள் கேட்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆளுநர் ஆட்சியில் வைப்பதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்யுமா?  அம்மாநிலத்தை இந்தியாவுடன் முழுமையாக இணைப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது? மற்றும் காஷ்மீரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏன் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை? எனக் கேள்வி எழுப்பி இருந்தார். அவரது இந்தப்பேச்சு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்திருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.