தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணியை தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றே அழைக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, துணை முதல்வர் ஓபிஎஸிடம் மிரட்டும் தோரணையில் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து டக்களவைத் தேர்தலை சந்திக்கிறது பாஜக. அதிமுக கூட்டணியில் அந்தக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்துக்கு வந்த அந்தக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தனியார் கல்லூரியில் நடைப்பெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட 18 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இதற்கிடையே மதுரை விமான நிலையத்தில் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது பாரதிய ஜனதா கட்சி போட்டியிடவுள்ள 5 தொகுதிகள் எவை என்பது குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது. மேலும் தமிழகத்தில் பாஜவுக்கு மிகக் குறைவான தொகுதிகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக, பாமக கட்சிகள் இருக்கின்றன. ஆதலால், அதிமுக தலைமையிலான கூட்டணி என்று அழைக்கக் கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்தார். 

மேலும், ‘கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமர் மோடி, மதுரை வந்தபோது நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில், எந்த மாதிரி ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டதோ, அதேமாதிரி கன்னியாகுமரியில் மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியும் நடக்க வேண்டும். அதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மிரட்டல் தோரணையில் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக தலைமையில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன என்று கூறிவரும் நிலையில், பாஜ தலைவர் அமித்ஷாவோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தான், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளதாக தெரிவித்ததால், கூட்டணியில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.