அரசியல் சாசனத்திக்கு எதிரான கருத்துக்களை ஒரு மத்திய மந்திரி பேசுவதை ஏற்று கொள்ள முடியாது. ஒரு மொழி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்தியை திணிப்பதற்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடையாது என்று மனோ தங்கராஜ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்துக்கு எதிராகப் பேசும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இந்திக்கு ஆதரவான பேச்சு
இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ‘ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. டெல்லியில் 70 சதவீத மத்திய அரசு அலுவல்கள் இந்தி மொழியில்தான் கடைபிடிக்கப்படுகின்றன. அதை முழுவதுமாக மாற்ற நேரம் வந்துவிட்டது” என்று பேசியிருந்தார். அமித் ஷாவின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய பேச்சுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தி மொழியைத் திணிப்பை அமித்ஷா கடைபிடிப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமித்ஷாவை நீக்குங்கள்
தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தன். திமுக தரப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி பல தலைவர்களும் இந்தி மொழி தொடர்பான அமித்ஷாவின் கருத்துக்கு கடும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், தன்னுடைய ட்விட்டர் பதிவில், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அமித்ஷாவை நீக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் சாசனத்திக்கு எதிரான கருத்துக்களை ஒரு மத்திய மந்திரி பேசுவதை ஏற்று கொள்ள முடியாது. ஒரு மொழி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்தியை திணிப்பதற்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடையாது” என்று மனோ தங்கராஜ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
