தமிழகத்தை மையப்படுத்தி தேசிய அரசியலில் பெரும் விவாதத்தையே உருவாக்கி இருக்கிறது கார்த்தி சிதம்பரத்தின் கைது.  தமிழக மற்றும் தேசிய காங்கிரஸில் ஆயிரம் கோஷ்டிகள் இருந்தாலும் கூட, பி.ஜே.பி. எதிர்ப்பு எனும் நிலைப்பாட்டில் அத்தனை கோஷ்டிகளும் ஒன்று கூடி நிற்கின்றன. மோடியை கடுமையாக விமர்சிக்கின்றனர். 

அந்த வகையில் இந்த கைதை ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என விமர்சிக்கிறார் பீட்டர் அல்போன்ஸ். அவர் “இந்திராணியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தது பெரும் தவறு. யார் இந்த இந்திராணி முகர்ஜி? பெற்ற மகளையே  கொன்றவர்.

அப்படிப்பட்ட பெண்ணின் மன நிலை எப்படியானதாக இருக்கும்! அதை வைத்து இந்த கைதை நிகழ்த்தியிருக்கிறார்களே. புலன் விசாரணை முடிந்தவுடன் தான் கைது செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் சுட்டிக்காட்டியுள்ளது. அதையும் தாண்டி இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

எந்த ஒரு வாக்குமூலமாக இருந்தாலும், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு முறையாக பெறப்பட்டிருந்தால்தான் ஏற்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தாலோ, விசாரணை அமைப்புகளைப் புறந்தள்ளினாலோ, சாட்சியங்களை கலைக்க வாய்ப்பிருந்தாலோ, வெளிநாடுகளுக்கு தப்பி விடுவார் என்றாலோ கைது செய்யலாம். ஆனால் கார்த்திக்கு கடந்த ஆறு மாதங்களாக சி.பி.ஐ. வசமிருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை. 

வங்கி ஊழலில் ஈடுபட்ட நிரவ் மோடி உள்ளிட்டோருடன் பி.ஜே.பி.யின் தொடர்புகள் வெளி வந்துவிட்டதாலும், பல இடங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் எங்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளதாலும் செய்வதறியாது நிற்கிறது அக்கட்சி. தங்கள் மீது விழும் சேறுகளை திசைதிருப்பி விடவே இந்த மாதிரியான பொய்களை புகாராக்கி கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

இங்கே அமித்ஷா மகனுக்கு ஒரு நீதி, கார்த்திக்கு ஒரு நீதியா? சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு, அதானி மீதான வழக்கு, வியாபம் ஊழல் ஆகிய பி.ஜே.பி.யின் கழுத்தை நெரிக்கும் புகார் விஷயங்களில் எல்லாம் மேல்முறையீடு செய்யாத சி.பி.ஐ. நல்ல ஆளுமை என பட்டம் பெற்ற சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீது பாய்வது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே!” என்று கொட்டித் தீர்த்துள்ளார். 

இதற்கிடையில், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 164-ன் கீழ் மாஜிஸ்திரேட் முன்னிலையில்தான் இந்திராண்டியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்கிறார்கள்.

அதில் சிதம்பரத்தையும் இழுத்திருக்கிறாராம் இந்திராணி. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது நார்த் பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் அவரை சந்தித்ததாகவும், அப்போது ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று தருவதாகவும், அதற்கு பதிலாக கார்த்தியின் பிஸ்னஸுக்கு உதவுமாறு சிதம்பரம் கூறியதாகவும் இந்திராணி சொல்லியிருக்கிறாராம். 

அதனால் கூடிய விரைவில் சி.பி.ஐ., சிதம்பரத்துக்கு விசாரணை சம்மன் அனுப்பும் என்று தகவல்கள் தடதடக்கின்றன. 

ஆக ஐ.என்.எக்ஸ். பூதம் இப்போதுக்கு அடங்காது போல!