சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன்தான் கூட்டணி என்று அதிமுகவை வைத்தே அறிவிக்கச் செய்து, அரசியலில் தனது ராஜதந்திர முத்திரையை அமித்ஷா பதித்துவிட்டார். கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், சீட் எண்ணிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் மும்முரம் அடைந்துள்ளது. பாஜக 40 தொகுதிகள் கேட்பதாகவும், 25 தொகுதிகளை வழங்க அதிமுக விரும்புவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 

தமிழகத்திற்கு அமித்ஷா வருகிறார் என்றதுமே அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எதிர்க்கட்சிகள் பயந்துபோய் உள்ளதாக பாஜக தலைவர் முருகன் கூற, பயப்பட வேண்டிய ஆட்கள் அதிமுகவினர் தான் என்று, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. சாணக்கியர், வியூகம் வகுப்பதில் கில்லாடி என்றெல்லாம் புகழப்படும் அமித்ஷாவின் தமிழக வருகைக்கு பிறகு அதிமுக – பாஜக கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நடந்ததென்னவோ அதற்கு நேர்மாறாக இருந்தது.

அரசு விழாவில் அதுவும் ஆளும் அதிமுகவின் தலைவர்களான துணை முதல்வர் பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வாயாலேயே, பாஜகவுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று சொல்ல வைத்ததில் வெளிப்பட்டது, அமித்ஷாவின் ராஜதந்திரம். பொதுவாக மத்திய அமைச்சர் வருகிறார் என்றால், விமான நிலையத்திற்கு சென்று முதல்வர், துணை முதல்வர்கள் எல்லாம் வரிசைகட்டி நின்று வரவேற்கும் சம்பிரதாயம் எதுவும் இல்லை. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர் வருவதாக இருந்தால் மட்டுமே, அவர்களை வரவேற்க முதல்வர் செல்வது வழக்கம். 

ஆனால், அமித்ஷாவை வரவேற்க, முதல்வர் இ.பி.எஸ். துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் என ஒட்டுமொத்த அதிமுகவும் காத்துக்கிடந்தது. பாஜகவின் தயவுக்காக அதிமுக காத்திருப்பதாகவே இது பார்க்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி வரை பாஜக தொண்டர்களுக்கு சற்றும் சளைக்காமல் அதிமுக தொண்டர்களும், கட்சிக் கொடிகளுடன் காத்திருந்ததுதான் இதில் இன்னொரு சுவாரஸ்யம்.

அதன்பிறகு மாலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், பல்வேறு திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். அரசு விழா நடைபெற்ற மேடையிலேயே, பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று, துணை முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிக்க, அதை வழிமொழிவது போல் அடுத்து பேசிய முதல்வர் பழனிச்சாமியும் ஆமோதித்தார். கூட்டணி அறிவிப்பு வெளியானதுமே, அரசு விழா அரசியல் விழாவானது.

சிறப்புரையாற்றிய அமைச்சர் அமித்ஷாவும், தன் பங்கிற்கு காரசாரமாக அரசியல் பேசினார். அதிமுக அரசை வானளாவிற்கு புகழ்ந்து தள்ளிய அவர், காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது என்று கேட்டு சவால் விட்டார். வாரிசு அரசியலை பற்றி அமித்ஷா மேடையில் குறிப்பிட்ட போது, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சங்கடத்தில் நெளிவது போல் தெரிந்தது.

அரசு விழாவை முடித்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு அமித்ஷா சென்றதும், சிறிது நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பின் தொடர்ந்து சென்று, அமித்ஷாவை சந்தித்தனர். தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டாலும், அமித்ஷாவிடம் தொகுதிப் பங்கீடு பற்றியே அதிமுக தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதிமுகவிடம் எத்தனை தொகுதிகள் எதிர்பார்க்கலாம் என்று நிர்வாகிகளிடம் கேட்கப்பட்டது. பாஜக நிர்வாகிகள் பேசும்போது, தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது; வரும் தேர்தலில் 50 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.

அமித்ஷாவுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அதிமுகவிடம் 40 தொகுதிகளை பாஜக தரப்பு கேட்டு வருகிறதாம். அதிலும் கொங்கு மண்டலத்தில் குறைந்தது 10 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி இருக்கிறது. ஆனால், அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு தொகுதிகளை ஒதுக்குவதா என்று எடப்பாடி பழனிசாமி தயங்குவதாக தெரிகிறது.

 பாஜகவின் இந்த எண்ணிக்கையை அதிமுக தலைமை ஒப்புக் கொள்ளவில்லை. அதிமுக தரப்பில் இருந்து 25 சீட்டுகள் மட்டுமே ஒதுக்க இயலும்; பாமக, தேமுதிக கட்சிகளும் இடம் ஒதுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்களாம். பாஜகவோ, 40 கேட்டாலும் 35 ஆவது கிடைக்கும் என்று நம்புகிறது. ஆனால், பாஜகவிற்கு 35 இடங்களை தந்தால், அதைவிட கூடுதலாக பாமக கேட்கும். தேமுதிகவும் தனது எண்ணிக்கையை அதிகரித்துவிடும் என்று அதிமுக யோசிக்கிறது. எனவே, பாஜகவுக்கு 25 இடங்கள் தான் என்பதில் அதிமுக தலைமை உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள். இதில் ஒன்றிரண்டு தொகுதிகள் வேண்டுமானால் கூடலாம் என்று, அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிமுக, பாஜகவினருடன் ஆலோசனை நடத்திய அமித்ஷா, நள்ளிரவு வரை ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை நடத்தியது, பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அமித் ஷா தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு இரவு 11 மணியவில் குருமூர்த்தி சென்றார். பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குருமூர்த்தியுடன், மத்திய அமைச்சர் அமித்ஷா நள்ளிரவை தாண்டி ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக இடையே தொகுதி எண்ணிக்கை, போட்டியிடும் இடங்கள் குறித்த எந்த இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், “இதுபற்றிய முடிவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; நீங்கள் எல்லாம் தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்” என்று, நிர்வாகிகளிடம் அமித்ஷா கண்டிப்புடன் தெரிவித்துவிட்டாராம். அத்துடன், பூத் கமிட்டிகள் பற்றிய விவரங்களை எல்லாம் கேட்டறிந்த அமித் ஷா, கிராம அளவில் பூத் கமிட்டிகள் வலுவாக இருக்க வேண்டுமென்று அறிவுரை வழங்கினாராம்.

சட்டமன்ற தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணியில் தான் பாஜக என்பது தெளிவாகிவிட்ட நிலையில், தொகுதி எண்ணிக்கை, போட்டியிடும் தொகுதிகள் விவகாரத்தில் இன்னமும் இழுபறி நீடிக்கிறது. இந்த விஷயத்தில் பாஜகவின் கை ஓங்குமா? அல்லது இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். இருவரும் சாதுர்யமாக பாஜகவை சமாளிப்பார்களா என்பதற்கான விடை வரும் வாரத்தில் தெரிய வரும்.