தமிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்ட நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த அமித் ஷா சதி செய்வதாக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- அமித் ஷா சென்னை வந்து சென்ற பிறகு தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை அதிகமாகியுள்ளது. 

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக அமித் ஷா சென்னை பொதுக்கூட்டத்தில் பேசினார். அந்த பேச்சை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக கருதுகிறேன். பொதுவாக வருமான வரித்துறை சோதனைக்கு உள்நோக்கம் கற்பிக்க கூடாது. ஆனால் தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகளில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. 

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சி தனது தேவைகளை தமிழகத்தில் நிறைவேற்றிக் கொள்ள இங்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியை மிரட்டவே வருமான வரித்துறை பயன்படுத்தப்படுவதாக கருத வேண்டி உள்ளது. மேலும் தற்போதையை சூழலை பார்க்கும் போது, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போது சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் நிலவுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது துவங்கியுள்ளதே வருமான வரித்துறை சோதனை யை பார்க்க முடியும். மேலும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம்.