மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பொருளாதார குறித்த விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, கணவனும், மனைவியும் ஒரே கண்ணோட்டத்தில்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என அமித் ஷா பதில் அளித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர். இவர் சிறந்த அரசியல் பொருளாதார அறிஞர் மற்றும் ஆந்திர அரசின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகர். பரகலா பிரபாகர் சமீபத்தில் முன்னணி பத்திரிகை ஒன்றில் பொருளாதாரத்துக்கு வழிகாட்டும் ஒரு துருவ நட்சத்திரம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில், பா.ஜ.க.வின் பொருளாதார கொள்கையை விமர்சனம் செய்து இருந்தார். பா.ஜ.க. அரசின் திட்டங்களுக்கு சர்தார் வல்லபாய் படேல் அடையாள சின்னமாக இருப்பது போல், அதன் பொருளாதார கட்டமைப்புக்கு நரசிம்ம ராவ் உறுதியான ஆதாரமாக இருக்க முடியும்.

நாட்டின் எல்லா துறைகளும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் நிலையில், பா.ஜ.க.அரசு அதனை ஏற்றும் கொள்ளும் மனநிலையில் இருப்பதாக தெரியவில்லை. நரசிம்மராவ்-மன்மோகன் சிங் மேற்கொண்ட பொருளாதார மறுசீரமைப்பு முறையே தற்போதைய அரசுக்கு துருவ நட்சத்திரம் வழிகாட்டும் என தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு அவரது மனைவியும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன், கடந்த 5 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., ஆதார் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் போன்ற அடிப்படை சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்த பா.ஜ.க.தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இது தொடர்பாக பதில் அளிக்கையில், கணவனும், மனைவியும் ஒரே கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இந்திய அரசியலில் இது போன்ற தரம் தாழ்ந்த நடைமுறைகளை நான் பார்த்ததில்லை. கணவனும்,மனைவியும் ஒப்பு கொள்ளும் நாடுதான் உங்களுக்கு வேண்டுமா? இது தங்களை தாராளவாதிகள் என்று கூறி கொள்பவர்களிடமிருந்து வருகிறது என பதில் அளித்தார்.