தென் மாவட்டங்களில் அதிமுக – பாஜக கூட்டணி மிகவும் வீக் ஆக இருப்பதாக உளவுத்துறை கொடுத்த அறிக்கையை வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்திய நிலையில் மறுநாள் ஓபிஎஸ் மற்றும் மூத்த அமைச்சர்களை அவசரமாக அழைத்து பேசியுள்ளார் இபிஎஸ்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவர் வருவதற்கு முன்னரே துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அங்கு வந்து காத்திருந்தார். இதே போல் மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்தனர். திடீரென அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முக்கிய நிர்வாகிகள் அனைவரும் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. எதற்காக அவர்கள் இங்கு வந்துள்ளனர் என பத்திரிகையாளர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை பலரும் தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் பூட்டிய அறைக்குள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் ஓபிஎஸ், எஸ்பி வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் போன்ற அதிமுக நிர்வாகிகள் மட்டுமே இருந்தனர். துவக்கத்தில் தேமுதிக கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியானது. ஆனால் தேமுதிக கூட்டணிக்காக இப்படி எடப்பாடி பழனிசாமி ரகசியமாக ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மூத்த அதிமுக நிர்வாகிகள் கூறிச் சென்றனர்.

பிறகு தான் முதல் நாள் இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடைபெற்ற ஆலோசனையின் தொடர்ச்சியாக அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருப்பது தெரியவந்தது. ஒரு மணி நேர ஆலோசனை முடிந்து அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். அதன் பிறகு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவர் பத்திரிகையாளரிடம் ரகசியமாக பேசினார். அப்போது அமித் ஷா தமிழகத்தில் உளவுத்துறை மூலமாக எடுத்துள்ள சர்வே குறித்து முதலமைச்சரிடம் பேசியிருந்ததாகவும் அது குறித்து முதலமைச்சர் தங்களிடம் பேசியதாகவும் எடுத்துக்கூறியுள்ளார்.

அமித் ஷா காட்டிய அறிக்கையில் தெற்கே சுமார் 9 மாவட்டங்களில் அதிமுக – பாஜக கூட்டணி மிகவும் பலவீனமாக உள்ளதாக கூறப்பட்டிருந்ததாகவும் அதனை சரி செய்ய சசிகலா, தினகரன் போன்றோர் அவசியம் என்று அமித் ஷா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாகவும் அந்த அமைச்சர் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். ஆனால் சசிகலா, தினகரனை சேர்த்துக் கொள்வது இத்தனை நாள் தாங்கள் செய்து வைத்துள்ள தேர்தல் ஏற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தென் மாவட்டங்களில் சசிகலாவால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய முக்குலத்தோர் சமுதாய சங்கங்களை பயன்படுத்தலாம் என்று எடப்பாடி அமித் ஷாவிடம் கூறியதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் எடப்பாடி கூறியதை அமித் ஷா ஏற்கவில்லை என்றும் சசிகலா விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்குமாறு அமித் ஷா கூறிச் சென்றுள்ளதாகவும் அது குறித்தே தாங்கள் ஆலோசித்ததாகவும் அந்த அமைச்சர் கூறியுள்ளார். அதே சமயம் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் என அமைச்சர்கள் ஒரே குரலில் இந்த விவகாரத்தில் சசிகலாவுக்கு எதிராக உள்ளதாகவும், சசிகலா உள்ளிட்ட யாரையும் மறுபடியும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முடிவெடுத்துள்ளதாகவும் அந்த அமைச்சர் கூறிச் சென்றுள்ளார்.