தமிழகத்திற்குஅடுத்த ஆண்டு சட்டப்பேரவைதேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் சனிக்கிழமை அன்று சென்னை வருகிறார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் சென்னையில் முகாமிட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு வரை தமிழக அரசியல் சார்ந்த விவகாரங்களை பாஜகவிற்காக கவனித்துக் கொண்டவர் வெங்கய்யா நாயுடு. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சென்னையில் முகாமிட்டு தமிழக அரசியல் நிலவரங்களை வெங்கய்யா நாயுடு தான் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓபிஎஸ் முதலமைச்சரான போதும் கூட வெங்கய்ய நாயுடு சென்னையை காலி செய்யவில்லை.

ஏன் தலைமைச் செயலகத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் உள்ளிட்டோரை அழைத்து ஆய்வுக் கூட்டம் எல்லாம் நடத்தினார் வெங்கய்ய நாயுடு. அந்த அளவிற்கு தமிழக அரசியல் விவகாரங்களில் வெங்கய்யாவிற்கு ஆர்வம் அதிகம் இருந்தது. பிறகு அவர் குடியரசு துணைத் தலைவரான பிறகும் கூட சென்னை மீதான பாசம் அவரை விடவில்லை. குடியரசு துணைத் தலைவரான பிறகு சென்னை ராஜ்பவனில் வந்து தங்கியிருந்த வெங்கய்ய நாயுடு தமிழகத்தின் மிக முக்கிய ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து விருந்து வைத்து உபசரித்தார்.

இதற்கெல்லாம் காரணம் தமிழக அரசியல் மீது அவருக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் வெங்கய்ய நாயுடுவின் உறவினர்கள் பலர் இங்கு உள்ளனர். தமிழில் வெங்கய்ய நாயுடு சரளமாக பேசக்கூடியவர். இதனால் தான் அவர் அமைச்சராக இருந்த போது தமிழக அரசியல் விவகாரங்களை கவனித்து வந்தார். ஆனால் தற்போது குடியரசு துணைத் தலைவரான பிறகு சென்னையில் அவர் முகாமிட்டுள்ளது நிச்சயம் அரசியல் காரணங்களுக்காக இருக்காது என்று அடித்துக்கூறுகிறார்கள்.

ஏனென்றால் அண்மையில் வெங்கய்ய நாயுடு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதில் இருந்து மீண்டு வந்தாலும் வயது மூப்பு காரணமாக மிகவும் களைப்பாக இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் தனது மனதுக்கு பிடித்து சென்னையில் வந்து தங்கி 21 நாட்கள் ஓய்வெடுக்க உள்ளதாகவும் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் வெங்கய்ய பங்கேற்க உள்ளதாகவும் கூறுகிறார்கள். அதே சமயம் வெங்கய்யாவின் வருகைக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இதனிடையே உள்துறை அமைச்சராக உள்ள அமித் ஷா சென்னை வரும் போது அவரை சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. புரட்டக்கால்படி மத்திய அமைச்சராக இருப்பவர் தான் முதலமைச்சரை சென்று சந்திக்க வேண்டும். இல்லை என்றால் பொதுவான ஒரு இடத்தில்சந்திப்பு நிகழ வேண்டும். அந்த வகையில் அரசு விழாவில் அமித் ஷா – எடப்பாடி சந்திக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையிலும் இருவரும் சந்திப்பார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக – அதிமுக கூட்டணி நீடிக்கிறது.

சட்டமன்ற தேர்தல் வேறு நெருங்குகிறது. இதனால் அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமியும் பாஜகவின் தேர்தல் வியூக வகுப்பாளர்களில் முதன்மையானவருமான அமித் ஷாவும் சந்திக்க வேண்டியது அவசியம். அப்படி சந்திக்கும் பட்சத்தில் தொகுதிப் பங்கீடு உள்ளிடட்வை குறித்து ஆலோசிக்கப்படலாம் அல்லது சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி உறுதிப்படுத்தப்படலாம். எனவே வெங்கய்ய நாயுடு சென்னை வருகை எப்படி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதோ, அதே போல் அமித் ஷாவின் சென்னை வருகையும் பல்வேறு கேள்விகளுக்கு விடையாக இருக்கும் என நம்பலாம்.