அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவி கரின் பென்ஸ் ஆகியோர் நாளை மக்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி மீதான அச்சத்தை போக்கும் வகையில் அவர்கள்  மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக அதன் கோரத்தாண்டவத்தால் உலக நாடுகள் சின்னாபின்னமாகி உள்ளது. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 1 கோடியே 70 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் மட்டும் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி சுமார் 90 சதவீதம் அளவிற்கு  வைரஸ் எதிர்த்து போரிடுவதாகவும்  வைரஸை சிறந்தமுறையில் தடுப்பதாகவும் ஆய்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால அத்தடுப்பூசி அனைத்து மாகாணங்களுக்கும் வினியோகிக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி முதல் அமெரிக்க மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது முன் களப்பணியாளர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  

ஆனாலும் அமெரிக்கர்கள் பெரும்பாலானோர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் அதன் மீதான நம்பிக்கையின்மையே அதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையிலும், தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையிலும், அந்நாட்டு முன்னாள் அதிபர்கள் மக்கள் முன்னிலையில் தொலைக்காட்சியில் வாயிலாக தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டின் துணை ஜனாதிபதியான மைக் பென்ஸ் நாளைக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள உள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவருடன் அவரது மனைவி  கரின் பென்ஸ்சும் தடுப்பூசி போட்டுக் கொள்ள உள்ளார். இதனால் அச்சம் நீங்கி, பொதுமக்கள் மக்கள் அதிகளவில் தடுப்பூசி  போட்டுக் கொள்ள முன்வருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.