இந்திய பயணம் சிறப்பாக அமைந்தது ,  அது மிகப் பெரிய வெற்றிப் பயணமாக இருந்தது என அமெரிக்க  அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் .  இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடித்து அமெரிக்கா சென்றுள்ள அவர் இவ்வாறு  பதிவிட்டுள்ளார் .  அமெரிக்க அதிபராக பதவியேற்று முதல் முறையாக அதிபர்  ட்ரம்ப் கடந்த 24 ஆம் தேதி இந்தியா வருகை தந்திருந்தார் .  குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் குடும்பத்துடன் வந்து இறங்கிய  அவர்  மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கண்டு அதன் அழகில் பிரமிப்புற்றார். 

  

ஆசியாவிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கமான உரிவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அரங்கத்தை திறந்து வைத்த அவர். அங்கு சுமார் 1.25 லட்சம் மக்கள் கலந்து  கொண்ட  நமஸ்தே ட்ரம்ப் என்ற நிகழ்ச்சியில் எழுச்சி உரையாற்றினார் . மறுநாள் காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கும் அவரது மனைவி மெலானியாவுக்கும்  சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது  இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார் .  பின்னர் இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் , இந்தியா மிகப்பெரிய மக்கள் வலிமை கொண்ட நாடு, இந்தியாவின் ஒற்றுமை உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது என பாராட்டினார்.   அதன் பின்னர் எரிசக்தி துறை மற்றும் பாதுகாப்பு துறை சம்பந்தமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையொப்பமானது.

  

இந்தியா அமெரிக்கா பாதுகாப்பு துறையில் இணைந்து செயல்படும் என்றும் , சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்பில் ராணுவ தளவாடங்களை  அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் பின்னர் அறிவிக்கப்பட்டது.    இது சர்வதேச அளவில் மிக முக்கிய ஒப்பந்தமாக கருதப்படுகிறது.  இந்நிலையில் அன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்புக்கு  இந்திய பாரம்பரிய முறைப்படி இரவு விருந்து அளிக்கப்பட்டது . பின்னர் ட்ரம்ப்  மற்றும் அவரது  மனைவி மெலானியா  மகள் இவாங்கா உள்ளிட்டோர் அன்று இரவு 10 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர் .  அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய சுற்றுப்பயணம் இந்திய வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  இந்நிலையில் அமெரிக்கா  சென்று சேர்ந்த பின்னர் இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டரில் அதிபர் ட்ரம்ப்  கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.   அதில் அவர் கூறும்போது ,  இந்திய சுற்றுப் பயணம் மிக சிறப்பாக இருந்தது. இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றிகரமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.