ஆம்பூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா (52) உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆம்பூர் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்குவதற்கான முக்கிய பங்காற்றியவர் அஸ்லம் பாஷா ஆவார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவர், தொகுதி மறு சீரமைப்பு மூலம் ஆம்பூர் தொகுதி மீண்டும் உருவான பிறகு 2011-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைக்கான தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று ஆம்பூர் எம்.எல்.ஏ.ஆக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், கடந்த சில  நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அஸ்லம் பாஷாவுக்கு மனைவி, மகன் உள்ளனர். அஸ்லம் பாஷாவின் மறைவிற்கு இஸ்லாமிய அமைப்புகள், வக்பு வாரிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.