சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அப்படி இருந்த போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. மறுபுறம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள் கிழமை அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து தலைமை செயலகத்திற்கு சென்றார். அதற்காக முத்துசுவாமி மேம்பாலம் சிக்னலை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலைப் போக்குவரத்து முடக்கப்பட்டது.

 அப்போது அங்கிருந்து ஆம்புலன்ஸ் ஒன்றும் செல்ல முடியாமல் சைரன் ஒலி எழுப்பியபடி நின்றுகொண்டிருந்தது. ஆம்புலன்ஸை  செல்ல அனுமதிக்குமாறு அங்கிருந்த பொதுமக்கள் காவல் துறையினரிடம் கேட்டு கொண்ட பின்பும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதலமைச்சரின் வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்திளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. 

 

இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில்;- முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன்பு, முழு முடக்கத்துக்குள் ஒரு முடக்கத்தை அறிவித்து, ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது உங்கள் வாகனங்கள் செல்வதற்காக அத்தியாவசிய போக்குவரத்தையும், ஆம்புலன்ஸ்களையும் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். அடடா! இதல்லவோ மக்கள் பணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு முதல்வருக்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறித்து பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாருமில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.