ரஜினிக்கு பாஜகவோடு செல்வதில் தயக்கம் இருக்கிறது என்று விசிக துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார். 


ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரஜினி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “நடிகர் ரஜினிகாந்த் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினால் அதை நான் வரவேற்பேன், பாராட்டுவேன். ஆனால், ரஜினி பாஜகவில் சேர வேண்டும் என்பதே என் விருப்பம். இதை தொடக்கம் முதலே கூறிவருகிறேன். அவர் அறிவாளி. என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். அதே வேளையில் அவரை கட்சியில் இணைக்க பாஜக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை” என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினி பாஜகவில் சேர வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது பற்றி விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் டிவி நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்துள்ளார். “இதைப் பற்றிதான் நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோமே. தங்களுக்கு இணக்கமாக இருப்பார், தங்கள் சித்தாந்தங்களோடு ஒத்துப்போவார் என்பதால் பாஜக அவரை அழைக்கிறது. தமிழகத்தில் பாஜகவின் நிலை என்ன என்பது ரஜினிக்கு நன்றாக தெரியும். தமிழகத்தில் உச்ச நட்சத்திரம் நமக்குக் கிடைத்தால், அவரை வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பாஜக நினைக்கிறது.


ஆனால், ரஜினிக்கு பாஜகவோடு செல்வதில் தயக்கம். மோடியே வீட்டுக்கு வந்து அழைத்தும் ரஜினி அவருக்கு ஆதரவு அழைக்கவில்லை. ரஜினி படத்தைப் போட்டு பாஜகவினர் பிரசாரம் செய்ததற்கு, எங்களுடைய அனுமதி இல்லாமல் நடந்த விஷயம் என்று லதா ரஜினிகாந்த் உடனே மறுப்பு தெரிவித்தார். ஆர்.கே. நகர் வேட்பாளர் கங்கை அமரன் சென்று ரஜினியைப் பார்த்து வந்ததும், யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்தார்.
ரஜினிக்கு பாஜகவோடு செல்வதில் தயக்கம் இருக்கிறது. தமிழகத்தில் கட்சியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர் தமிழகத்தின் எண்ணப் போக்கை வெளிப்படுத்தினால்தான் முடியும். தமிழகத்துக்கு என சமூக நீதி கொள்கை, மொழி கொள்கை என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், பாஜகவின் எண்ணப் போக்கை வெளிப்படுத்தினாலோ, பாஜக குரலாக ஒலித்தாலோ சரியாக இருக்காது.” என்று ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்தார்.