சென்னை மாநகராட்சியில் கூடுதல் வார்டுகளை கேட்டு திமுக தலைமையிடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளன என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் வார்டுகளை ஒதுக்க திமுக திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பிப்ரவரி 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக உள்ள நிலையில் கூட்டணியாகப் போட்டியிடும் கட்சிகள் ஜரூராகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் திமுக கூட்டணி; இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணி எனப் பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் கட்சிகள் இடையே மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தும் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி சேர்மன் பதவிகளைப் பெறவும், வார்டுகளை அதிகமாகப் பெறவும் ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் இருந்தாலும், மிகப் பெரிய மாநகராட்சி சென்னைதான். இங்கு 200 வார்டுகள் உள்ள நிலையில், மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மேயர் பதவிக்கு திமுகவினரே முன்னிறுத்தப்படுவார்கள் என்பதால், கணிசமான வார்டுகளைப் பெற்று போட்டியிட வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. எனவே, சென்னை மாநகராட்சியில் கூடுதல் வார்டுகளை கேட்டு திமுக தலைமையிடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளன என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் அதிக வார்டுகள் பெறும் ஆசையில் இருந்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்க உத்தேசித்துள்ள வார்டுகள் எண்ணிக்கை குறித்து தகவல்கள் உலா வரத் தொடங்கியுள்ளன. இதன்படி 200 வார்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகள்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 வார்டுகள்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 வார்டுகள்; மதிமுகவுக்கு 2 வார்டுகள்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 வார்டுகள் என ஒதுக்க திமுக திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் 200 வார்டுகள் உள்ள நிலையில் திமுக தாராளம் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒற்றை இலக்கத்தில் வார்டுகளை ஒதுக்க திமுக திட்டமிட்டிருப்பதாக வெளியாகும் தகவலால் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் ஷாக்கில் இருக்கிறார்கள்.
