தனிக்கட்சி தொடங்க உள்ள, நடிகர் ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்த நிருபர்கள், 'ரஜினியின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?' என, கேட்டனர். அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எல்லாருக்கும் ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. அவர் கட்சி துவங்கட்டும்; கொள்கைகளை அறிவிக்கட்டும். அதுபற்றி, என் கருத்துக்களை தெரிவிக்கிறேன்'' என்றார்.

'தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது என, ரஜினியிடம், தமிழருவி மணியன் கூறியதாக, செய்தி வந்துள்ளது. அதைப் பற்றிய, தங்கள் கருத்து என்ன' என, மீண்டும் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஸ்டாலின், ''தமிழருவி மணியனை தவறாக அருகில் வைத்து விட்டோமோ என, ரஜினி சொன்னதாக தான், எனக்கு தகவல் வந்தது'' என்றார்.

ஸ்டாலின் பதில் குறித்து, தமிழருவி மணியன் கூறுகையில், ''தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கும் தவறை, நான் செய்ய மாட்டேன்’’ என, ரஜினி உறுதி அளித்துள்ளாதாக கூறினார்.