கடந்த ஆண்டு கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றும் அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் ஆட்கி அமைச்ச முடியாமல் போய்விட்டது.

அதே நேரத்தில் பாஜக கோவா பார்வர்டு கட்சி மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்களை சேர்த்துக் கொண்டு மனோகர் பாரிக்கர் தலைமையில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில்தான் மனோகர் பாரிக்கர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து பிரமோத் சாவந்த் முதலமைச்சரானார்.

இதனிடையே கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்கள் கடந்த வாரம் பாஜகவில் இணைந்துள்ளனர். இதையடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்து, புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க முதலமைச்சர்  பிரமோத் சாவந்த் முடிவு செய்தார். அதன்படி அமைச்சரவையில் இன்று மாலை மாற்றம் செய்யப்படுகிறது.

புதிய அமைச்சர்களை சேர்ப்பதற்கு வசதியாக, ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 4 பேரை நீக்கி பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார். 

துணை முதல்வர் விஜய் சர்தேசாய், நீர்வளத்துறை அமைச்சர் வினோத் பால்யேகர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயேஷ் சல்கோங்கர் (இவர்கள் மூவரும் கோவா பார்வர்டு கட்சியைச் சேர்ந்தவர்கள்), வருவாய்த்துறை அமைச்சர் ரோகன் கான்டே (சுயேட்சை) ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்குப் பதிலாக, துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த மைக்கேல் லோபோ மற்றும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த 10 எம்எல்ஏக்களில் 3 பேர் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். 

புதிதாக சேர்ந்த எம்எல்ஏக்களுக்காக தொடக்கத்தில் ஆட்சி அமைக்க உதவிய கூட்டணி கட்சி அமைச்சர்களை கழற்றிவிட்டது அம்மமாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.