சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது குடும்பத்தினருடன் ராமேஸ்வரத்தில் உள்ள புரோகிதர் ஒருவரின் வீட்டில் சிறப்பு பூஜை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் விஜயகாந்த் குடும்பத்தினருடன் பங்கு பெற்றதாகவும் கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அரசியல்  கட்சிகள் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. கூட்டணி, தொகுதி பங்கீடு  போன்றவை குறித்து சூசகமாக அவ்வப்போது கருத்துக்களைக் கூறி வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளன்று செய்தியாளர்களை சந்தித்த அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்,  விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைவதை கட்சியினர் விரும்புவதாக தெரிவித்தார்.  அதேநேரத்தில் அதிமுகவில், தேமுதிக இடம் பெற்றுள்ள நிலையில்  பிரேமலதாவின் கருத்து அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் தேர்தல் தொடர்பாக கருத்துகளை கூறி வருகின்றன. இந்த நிலையில்  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே  கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த்.  தான் ஏற்கனவே தெரிவித்த கருத்தையே மீண்டும் உறுதிபடுத்தினார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் தேமுதிகவினர் மிகுந்த உற்சாகத்துடன் களப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார். மேலும் இதுகுறித்து செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுத்து ஜனவரி முதல் வாரத்தில் விஜயகாந்த் முடிவை அறிவிப்பார் என்றும்பிரேமலதாதெரிவித்தார். 

இந்தச் சூழ்நிலையில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் நேற்று காலை ராமேஸ்வரம் வந்ததாகவும் அங்கு புரோகிதர் ஒருவரின் வீட்டில் சிறப்பு யாக வழிபாடு நடைபெற்றது என்றும், அதில் விஜயகாந்த் குடும்பத்தினருடன் பங்கு பெற்றார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ராகு கேது பெயர்ச்சியையொட்டி 19 புரோகிதர்கள் சேர்ந்து நடத்திய திலக ஓமம் என்ற இந்த வழிபாட்டை விஜயகாந்த் குடும்பத்தினர் நடத்தியுள்ளனர் என கூறப்படுகிறது. குடும்ப நலனுக்காகவும், அரசியல் மாற்றத்திற்காகவும் இந்த வழிபாடு நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.