Asianet News TamilAsianet News Tamil

கொடுமைப்படுத்தியதை சொல்லி கதறும் ரேகா! நெஞ்சை உலுக்குகிறது! ஆளுங்கட்சி எம்எல்ஏ மகனுக்கு எதிராக திமிரும் திருமா

பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவின் புகாரையடுத்து கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும்,  காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

alleged harassment of scheduled caste girl... Thirumavalavan against ruling party MLA Son tvk
Author
First Published Jan 20, 2024, 7:53 AM IST

ரேகாவை நள்ளிரவு வரை வேலை செய்யச்சொல்லி அடித்ததுடன்,  சாதியைச் சொல்லியும் இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லி  அந்த பெண் கதறுவது நெஞ்சை உலுக்குகிறது என திருமாவளவன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வௌியிட்டுள்ள அறிக்கையில்;- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநருங்குன்றம் கிராமம்,  ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த பள்ளி மாணவி ரேகாவுக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பனிரெண்டாம் வகுப்பை முடித்துள்ள மாணவி ரேகா நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயிலும் கனவில் இருந்துள்ளார். அதற்காக அவர் வீட்டு வேலை செய்ய முடிவெடுத்து, திருவான்மியூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் முகவர் ஒருவர் மூலம் வீட்டுப் பணியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார். வீட்டு உரிமையாளர் அன்டோ மதிவாணன் என்பவர் பல்லாவரம் தொகுதியைச் சார்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். அவரது மனைவி மெர்லின் என்பவர் தான், மாணவி ரேகாவைக் குரூரமாகக் கொடுமைப் படுத்தியுள்ளார் எனத் தெரியவருகிறது. 

இதையும் படிங்க;- வீட்டு வேலைக்கு வந்த இளம்பெண்ணுக்கு சூடுபோட்டு சித்திரவதை.. திமுக எம்எல்ஏவின் மகன், மருமகன் மீது வழக்கு.!

alleged harassment of scheduled caste girl... Thirumavalavan against ruling party MLA Son tvk

வீட்டு வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே பல மாதங்களாகச் ரேகாவுக்குச் சம்பளம் வழங்காமலும், அவரது குடும்பத்தினரைச் சந்திக்கவிடாமலும், ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை வாங்கியதுடன், மனிதாபிமானமற்ற முறையில் அடித்துத் துன்புறுத்திக் கொடூரமாக வதைத்துள்ளாரென்று தெரியவருகிறது. இது மனிதாபிமானமுள்ள, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஈவிரக்கமற்ற இச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

alleged harassment of scheduled caste girl... Thirumavalavan against ruling party MLA Son tvk

பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவின் புகாரையடுத்து கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும்,  காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி ரேகா, கணவனால் கைவிடப்பட்ட ஒரு தாயின் அரவணைப்பில் வளர்ந்து மருத்துவராகும் கனவுடன்  உழைத்திட வீட்டுப்பணியில் சேர்ந்துள்ளார். உழைத்துச் சம்பாதித்துப் படிக்கத் துடிக்கும் ஒரு ஏழைச் சிறுமியை ஊக்கப்படுத்த வேண்டிய பக்குவம் இல்லாமல், நெஞ்சில் ஈரமின்றி இவ்வாறு கொடுமைப்படுத்தும் இவர்களின் கொடிய போக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

alleged harassment of scheduled caste girl... Thirumavalavan against ruling party MLA Son tvk

கணவன் தனது மனைவியை அடிக்கவோ, பெற்றோர் தமது பிள்ளைகளை அடிக்கவோ, ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ கூடாது என்கிற 'மனித உரிமை' குறித்த விழிப்புணர்வு, உலகெங்கும் வளர்ந்துள்ள இக்காலச் சூழலில், இவர்களால் எப்படி இவ்வாறு நடந்து கொள்ளமுடிகிறது என்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. ரேகாவை நள்ளிரவு வரை வேலை செய்யச்சொல்லி அடித்ததுடன்,  சாதியைச் சொல்லியும் இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லி ரேகா கதறுவது நெஞ்சை உலுக்குகிறது.

இதையும் படிங்க;-  ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கூப்பிட்டுபோய் ஆளுங்கட்சியின் எம்எல்ஏ மகன் இப்படி செய்யலாமா? டிடிவி.தினகரன்

alleged harassment of scheduled caste girl... Thirumavalavan against ruling party MLA Son tvk

இந்நிலையில், குற்றம் சாட்டப்படுள்ளவர்களைக் கைது செய்வது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளில் அரசு உறுதியாக இருக்கவேண்டுமென வலியுறுத்துகிறோம்.  பதினெட்டு வயதுக்கும் கீழாகவுள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் குற்றச்செயல்களைத் தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தழுவிய அளவில் இது குறித்து விரிவான புலனாய்வை மேற்கொள்ள நீதிபதி ஒருவரின் தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டுமெனவும் விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட ரேகாவுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி அளிக்க வேண்டிய இழப்பீட்டை வழங்குவதுடன், அவருடைய மருத்துவக் கல்விக்கான கனவை நனவாக்கிட ஆவன செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் கோரிக்கை விடுக்கிறோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios