அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டும் அனைவருமே தீவிரவாதிகள் தான் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றம் தாக்கப்பட்ட போது நமது வீரர்கள் அதை திறமையாக பாதுகாத்தனர் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டும் அனைவருமே தீவிரவாதிகள் தான் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றம் தாக்கப்பட்ட போது நமது வீரர்கள் அதை திறமையாக பாதுகாத்தனர் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்றது முதல் தமிழக அரசியல் களம் வெப்பம் நிறைந்ததாகவே உள்ளது. அந்த அளவுக்கு அவர் எடுக்கும் நடவடிக்கைகளும் அதற்கு தமிழக அரசின் எதிர்வினைகளும் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாகவே வைத்துள்ளது. ஆளுநர் ஆர்எல் ரவி தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்றும் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களில் கையொப்பம் இடாமல் எதேச்சதிகாரத்துடன் நடந்து வருகிறார் என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது.

இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டமும் எதிர் கட்சிகளால் நடத்தப்பட்டு அது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கிடையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய The Lurking Hydra என்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புத்தகத்தை வெளியிட்டு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான ஆவணம், தீவிரவாதத்துக்கு எதிரான வாதத்தை முன்வைக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதில் இந்திய ராணுவம் அதிக திறன் வாய்ந்தது. பல்வேறு நாடுகள் இந்தியா மீது போர் நிகழ்த்தியுள்ளன. 1990 ஆண்டு தான் ராணுவத்தில் ஒரு பிரிவில் சேர்ந்தபோது, தீவிரவாதத்தை எதிர்ப்பதே என் தினசரி வழக்கமான ஒன்றாக இருந்தது எனக் கூறினார்.

இதேபோல் பிரதமர் மோடி 2014 பதவியேற்ற பின்பு ராணுவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. தீவிரவாதத்தை எதிர்த்து சண்டையிடுவதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை என்ற அவர், அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் ஒவ்வொருவரும் தீவிரவாதிகள்தான் என்றார். அதுமட்டுமின்றி நம் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட போது நமது ராணுவ வீரர்கள் அதை மிகத் திறமையாக பாதுகாத்தனர் என்றார். அதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள் என்றார். புல்வாமா தாக்குதலுக்கு நமது ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக நாடு அமைதியான முறையில் இருந்து வருகிறது, இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்த பிறகு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் அங்கு வரத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் இதற்கு முன்பு அங்கு தீவிரவாதம் மட்டுமே ஓங்கி இருந்தது. ஆனால் தற்போது அங்கு சூழல் முற்றிலும் மாறியுள்ளது. நாட்டிலேயே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஒரு மோசமான இயக்கம், அவர்கள் பல முகமூடிகளை அணிந்து கொண்டு நம் நாட்டில் இயங்கி வருகின்றனர், பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு பின்புலமாக அந்த இயக்கம் செயல்படுகிறது என சரமாரியாக குற்றம் சாட்டினார்.