அனைத்து மாநிலங்களும் வியக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி... முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
பெண்களுக்கு இட ஒதுக்கீடு, சமூக நீதியை கொண்டு சேர்த்தது தமிழகம் என்றும் இட ஒதுக்கீட்டிற்கு போராடியது திமுக என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு, சமூக நீதியை கொண்டு சேர்த்தது தமிழகம் என்றும் இட ஒதுக்கீட்டிற்கு போராடியது திமுக என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடந்த போராட்டங்கள் காரணமாகத்தான் இந்த திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். அதன் மூலமாகத் தான் இந்தியாவில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க இருந்த தடைகள் மொத்தமாக நீக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மண்டல ஆணையத்தால் வழங்கப்பட வேண்டிய 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டு உரிமையை நிலை நாட்ட தொடர்ந்து போராடியது திராவிட இயக்கம். வி.பி.சிங்கை பிரதமராக ஆதரித்து அதனை செயல்படுத்தி கொடுத்ததன் மூலம் தான் இந்தியாவில் இருக்கும் அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களும் தடையின்றி நிர்வாக அதிகாரம் பெற வழிவகை செய்தது தமிழ்நாடு.
மாநில சுய ஆட்சிக்காக 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததன் மூலமாக மாநில சுயாட்சி நிலைக்கவும் இந்தியாவில் கூட்டாட்சி செழிக்கவும் அடித்தளமிட்டவர் அன்றைய முதலமைச்சர் ஆக இருந்த கலைஞர். ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை நாள் என்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றலாம் என்ற உரிமையை பெற்று தந்தவரும் அன்றைய முதலமைச்சர் கலைஞர். இன்றைய நாள் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும் வியந்து பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். இப்படி கடந்த பல நூறு ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சிக்கும் நலத்துக்கும் செழிப்புக்கும் செம்மைக்கும் வழிகாட்டி வருவது தமிழ்நாடு என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
இதையும் படிங்க: விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.. எடப்பாடி அடுத்த முதல்வர் ஆவார் - ஆருடம் சொன்ன தமிழ் மகன் உசைன்
அத்தகைய பெருமைமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற அடிப்படையில் மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையில் உங்களை எல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன். அனைத்து துறை வளர்ச்சி அனைவருக்கும் ஆன வளர்ச்சி அனைத்து மாவட்ட வளர்ச்சி அனைத்து சமூக வளர்ச்சி என்பது எனது ஆட்சியின் விரிந்த எல்லையாக அறிவித்திருக்கிறேன். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், இன உரிமை, மொழிப்பற்று, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியலின் சேர்க்கையாக திராவிட மாடல் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கருத்தியல் மட்டுமல்ல செயல் வடிவம். இட ஒதுக்கீடு வகுப்பு வரை உரிமை இட ஒதுக்கீடு வகுப்பு அறிவு உரிமை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என எந்த பெயர் வைத்துக் கொண்டாலும் அவற்றின் உள்ளடக்கம் என்பது சமூகநீதியே. பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகம் கல்வியை, வேலைவாய்ப்பை, அரசியல் அதிகாரத்தை, நிர்வாக பொறுப்புகளை பெற முடியவில்லை. இவற்றைப் பெறுவதற்கான வார்த்தை தான் சமூக நீதி கருத்தியல்.
நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் அனைத்து சமூக மக்களும் கல்வி வேலை வாய்ப்புகளில் இருந்த நிலைமையும் இன்று அடைந்துள்ள பயன்களையும் பாருங்கள். இது தான் திராவிட சிந்தனையின் வெற்றியாக அமைந்திருக்கிறது. ஒரு காலம் இருந்தது வடக்கு வாழுகிறது தெற்கு தேய்கிறது என்று பேரறிஞர் அண்ணா முழங்கினார். ஆனால் இன்று வடக்கை விட தெற்கு பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது. இதுதான் திராவிட சிந்தனையின் வெற்றியாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு மகளிருக்கு பேருந்துகளில் கட்டணம் கட்டணம் இல்ல பயணி வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம். வேலைக்கு போகும் பெண்களின் பொருளாதார சுமையை குறைத்து இருக்கிறோம் என்பது ஒரு பக்கம். இந்த வசதி காரணமாக ஏராளமான பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சமூகத்தின் பல்வேறு பணிகளை முன் நின்று செய்வதற்கு தங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் குடும்பம் மட்டுமல்ல இந்த சமூகம் வளர்ச்சி பெறுகிறது.
இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது? ஈபிஎஸ் ஆதரவாளர் ஜெயக்குமார் விளக்கம்!!
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிட்டால் பெரும்பாலான வளர்ச்சி குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நிலைத்து நிற்கக் கூடிய வளர்ச்சி குறியீடு பொருத்தவரையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு உயர் கல்வியின் செயற்கை விகிதம் 51.8 விழுக்காடாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவின் நீதிபற்றாக்குறை என்பது 6.8 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டில் 3.6 விழுக்காடு தான்.
இந்திய அளவில் தனிநபர் வருமானத்தை விட தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் என்பது அதிகம். பணவீக்கும் என்பது இந்தியாவில் 6.71 விழுக்காடு. ஆனால் தமிழ்நாட்டில் பணவீக்கம் என்பது 4.8 விழுக்காடு தான். பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை 4 விழுக்காடு மட்டுமே.
இந்தியா முழுவதும் சிறந்த 100 உயர் கல்வி நிறுவனங்களில் 18 தமிழகத்தில் உள்ளது. தலைச் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழகத்தில் உள்ளது. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளது. இவை அனைத்தும் தமிழகத்தின் வளர்ச்சியை காட்டுகிறது. இந்த அடித்தளத்தில் தான் திராவிட மாடன் ஆட்சியானது நடந்து வருகிறது. ஏற்றுமதியை கணக்கிடுவது வேறு மாடல். மக்களின் ஏற்றத்தை பார்ப்பது திராவிட மாடல். இறக்குமதியை மட்டும் கணக்கிடுவது வேறு மாடல். இணக்க சிந்தனையுடன் திட்டமிடுவது திராவிட மாடல். சில மாநிலங்கள் வளர்ந்தால் போதும் என்று நினைப்பது வேறு மாடல். அனைத்து மாவட்டங்களையும் வளர்க்க நினைப்பது திராவிட மாடல். ஒற்றுமையில் வேற்றுமை உருவாக்குவது வேறு மாடல். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது திராவிட மாடல். அதனால் தான் அனைத்து மாநிலங்களிலும் திராவிட மாடல் சிந்தனை பரவ வேண்டும் என்று நினைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.