காவிரி பிரச்சினை.... அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு கர்நாடக முதல்வர் திடீர் ஏற்பாடு.....

காவிரி பிரச்சினை குறித்து ஆலோசிக்க பெங்களூருவில் வருகிற 5-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரிநீர் பங்கீட்டு பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நாம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்தாக வேண்டும்.

இது காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவு. அதை நாம் மீறக்கூடாது. மீறினால் நாம் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் நாம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை அணைகளில் இருந்து திறந்துவிட்டே ஆக வேண்டும்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமாரசாமி போராட்டம் நடத்தி வருகிறார். அவரும் முதல்-மந்திரியாக இருந்தவர். கோர்ட்டின் உத்தரவை மீறினால் என்னென்ன சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று அவருக்கும் நன்றாக தெரியும்.

காவிரி நீர் பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக வருகிற 5-ந் தேதி பெங்களூருவில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். இதில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.