அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அழைக்கப்பட்ட விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் இது குறித்து விவாதிக்க நேற்று முன் தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முதலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவே இல்லை. அதே சமயம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கமலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கலந்து கொண்டார். 

இந்த நிலையில் சட்டப்பேரவையில் நேற்று பேசிய துரைமுருகன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்படாத கட்சிகளை அழைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதாவது மக்கள் நீதி மய்யம் கட்சியை குறிப்பிட்டே துரைமுருகன் அப்படி பேசியதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் மக்கள் நீதி மய்யம் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சி தான், இன்னும்அங்கீகாரம் பெறவில்லை.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து கட்சிகளையும் அழைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார். அதனால் தான் அழைக்கப்பட்டார்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின் தான் அப்படி கூறவே இல்லை என்றார். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்ததாக சொல்கிறார்கள்.

 

முதலமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் என்பதால் தான் எதிர்கட்சி தலைவர் என்கிற முறையில் தான் பங்கேற்க திட்டமிட்டதாக ஸ்டாலின் தரப்பு கூறுகிறது. மேலும் கமல், சீமான் போன்ற அங்கீகாரம் இல்லாத கட்சிகளை அழைத்ததிலும் ஸ்டாலின் கடுப்பானதாக சொல்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டம் என்றால் தான் தான் கலந்து கொண்டதாகவும் இல்லை என்றால் வேறு யாரையும் அனுப்பியிருக்கலாம் என்றும் ஸ்டாலின் தரப்பு கூறி வருகிறது. 

இதற்கு காரணம் தேர்தல் சமயத்தில் திமுகவை கமல் மற்றும் சீமான் கடுமையாக விமர்சித்தது தான் என்கிறார்கள். அனைத்து கட்சி கூட்டத்தை வைத்து இப்படி ஒரு பிரச்சனையை திமுக எழுப்ப வேண்டுமா? என்று பிற கட்சிகள் கேட்க ஆரம்பித்துள்ளன.