அதிமுக கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் இணைகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் மூன்று தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. 

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 36 நாட்களே உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது, தேர்தல் பணிகளை விரைவுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி இணைந்துள்ளது. 

சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் உள்ளிட்டோரை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தலைவர் சேதுராமன் இன்று சந்தித்து பேசினார். சந்திப்பு முடிந்து செய்தியாளர்களை சந்தித்து அக்கட்சியின் பொது செயலாளர் எஸ்.ஆர்.தேவர், அதிமுக கூட்டணியில் மூன்று சட்டமன்ற தொகுதிகளை கேட்டுள்ளதாகவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறினார். 

ஏற்கனவே 2011 ல் அதிமுக கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்ட அகில இந்திய மூவேந்த முன்னணி கழகம், இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது குறுப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி வெளியேறி மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்துள்ளது. அதே போல் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.