நான்கு நியமன எம்.பி.க்களும் தென்னிந்தியர்கள்.. பாஜகவின் ‘ஆப்ரேஷன் லோட்டஸ்’ தென்னிந்தியாவில் தொடங்கியதா?
தென்னிந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் புதிதாக நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், தென்னிந்தியாவில் பாஜகவை வளர்க்கும் பணியை அக்கட்சி தொடங்கிவிட்டதாகப் பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 பேரை மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் உறுப்பினர்களாக நியமிப்பது வழக்கம். கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை போன்ற துறைகளில் பங்களிப்பை வழங்கியவர்களுக்கு இந்தப் பதவி வழங்கப்படும் .தற்போது உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்பட 5 பேர் நியமன எம்.பி.க்களாக இருந்து வருகிறார்கள். காலியாக இருக்கும் பதவிகள் தற்போது நிரப்பப்பட்டுள்ளன. அதன்படி 4 பேரை நியமன எம்.பி.க்களாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்து உள்ளது.
இதையும் படிங்க: விரைவில் தமிழகம், தெலங்கானாவில் பாஜக ஆட்சி.. அடுத்த டார்கெட் தென்னிந்தியாதான்.. கர்ஜனை செய்த அமித் ஷா.!
இசையில் இளையராஜா புரிந்த மகத்தான சாதனைகளுக்காக பத்மவிபூஷண், பத்மபூஷண் உள்பட பல விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ளார். இளையராஜா தவிர்த்து, கேரளாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கர்நாடகாவைச் சேர்ந்த சமூக சேவகரும், தர்மஸ்தலா கோயில் நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்டே, ஆந்திராவைச் சேர்ந்தவரும் ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதியருமான இயக்குநர் ராஜமவுலியின் தந்தை வீரேந்திர பிரசாத்தும் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அடிதூள். போட்ரா வெடிய.. எம்பி ஆகிறார் இசைஞானி இளையராஜா; பிரதமர் மோடி வாழ்த்து
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த நால்வருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜகவால், தென்னிந்தியாவில் அதுபோல நிலை பெற முடியவில்லை. 4 தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், பாஜகவின் வளர்ச்சி குறித்தும், ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்கள் குறித்தும், குறிப்பாக தென்னிந்தியாவில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உள் துறை அமைச்சரும் முன்னாள் தேசிய தலைவருமான அமித் ஷா பேசுகையில், “ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும். பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி இனி தென்னிந்தியாவில் இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த 4 சாதனையாளர்களுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து தேர்தலை எதிர்நோக்கியுள்ளன. பலவீனமான மாநிலங்களிலோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ ‘ஆப்ரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் காய்களை கடந்த காலங்களில் பாஜக நகர்த்தியிருக்கிறது. தற்போது தென்னிந்தியாவில் நான்கு மாநிலங்களில் மக்களின் ஆதரவைப் பெறும் ஒரு முயற்சியாக மக்களின் அபிமானவர்களுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டிருப்பதன் மூலம் தென்னிந்தியாவில் பாஜகவை வளர்க்கும் திட்டத்தை பாஜக செயல்படுத்த தொடங்கிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: எம்.பி பதவி இப்படித்தான் கிடைச்சதா? கலாய்க்கும் நெட்டிசன்கள்.. ஒன்றுதிரண்ட பாஜக - ட்விட்டரில் போர் !