அடிதூள். போட்ரா வெடிய.. எம்பி ஆகிறார் இசைஞானி இளையராஜா; பிரதமர் மோடி வாழ்த்து
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார் இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இது இளையராஜா ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இளையராஜாவுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கூறியுள்ளார். தற்போது இளையராஜா அமெரிக்காவில் உள்ளார். இந்நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதேபோல் தடகள வீராங்கனை பிடி உஷாவும் ராஜ்யசபா எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி சாதாரண பின்னணியிலிருந்து வந்த இளையராஜா வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார், மனித உணர்வுகளை இசையின் வாயிலாக அழகுற பிரதிபலித்தவர் இளையராஜா, அப்படிப்பட்டவரை நாடாளுமன்ற எம்.பியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுடன் மொத்தம் 4 பேர் நிமயிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ள தகவல் பின்வருமாறு:-
பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த இந்தியர்களை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அவர்களுக்கு ராஜசபா பதவிகளை வழங்கியுள்ளது. தற்போது ராஜ்யசபா பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட நால்வருமே தங்கள் துறையில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றவர்கள் ஆவர்.
"சப்கா சாத் சப்கா விகாஸ்" என்ற அடிப்படையில் மோடி அரசு தொடர்ந்து பல்வேறு பிரதிநிதித்துவம் வழங்கிவருகிறது. நான்கு நியமன உறுப்பினர்களின் ஒரு பெண், ஒரு தலித் மற்றும் சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர் (ஜெயின் சமூகம்) ஆகியோர் இந்த நிநமனத்தில் அடங்குவர்.
தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரும் இந்திய சமூகத்திற்கு உரிய பங்காற்றியுள்ளனர். அவர்களில் ஒருவர் விளையாட்டு வீராங்கனை ஆவர், மற்றொருவர் படைப்பாற்றல் மேதை ஆவர். இதில் ஒருவர் சினிமா துறையைச் சேர்ந்தவரும் ஆவார், மற்றொருவர் சமூக சேவையில் சிறந்து விளங்குபவர் ஆவார். இப்பட்டியலில் பத்மபூஷன் விருது பெற்ற இருவரும் பத்மஸ்ரீ விருது பெற்ற ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
இசைஞானி இளையராஜா...
அந்த வரிசையில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்தவர் இளையராஜா, இவர் தற்போது ராஜ்யசபா நியமன உறுப்பினராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார், இளையராஜா இந்த நிலையை எட்டுவதற்கு எண்ணற்ற இன்னல்களையும், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும் சந்திக்க நேர்ந்தது, இருப்பினும் அவர் அத்தகைய தடைகளை எல்லாம் உடைத்து நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நீண்ட நெடிய வாழ்க்கையில் அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை அவர் நடத்திக் காட்டியுள்ளார். 2018ல் அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது, மேலும் அவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 5 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். படைப்பாளிகள் மேதைகள் எப்படி எல்லா கஷ்டங்களையும் தடைகளையும் தாண்டி எழுச்சி பெறுவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் இளையராஜாவின் வாழ்க்கை. என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.