கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் மார்ச் 31-ம் தேதி வரை திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 110-ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளனர். முக்கியமாக தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது. 

இந்நிலையில், இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பின்படி, தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருபத்தூர், இராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 2020 மார்ச் 31-ம் தேதி வரை ஒத்தி வைத்திட வேண்டுமென கேட்டுகொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.