முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனி ஆலோசனை என்பது அண்ணன், தம்பிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;- ஒவ்வொரு அதிமுக தொண்டரும் சரி, தலைமைக்கழக நிர்வாகி முதல் கிளைக்கழக நிர்வாகியும் சரி, மக்களும் சரி தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அதுதான் எல்லோருடைய ஒருமித்த கருத்து. வரும் சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கருத்து எட்டப்படும் என்றார்.

எப்போதும் சென்டிமென்ட்டாகவே அதிமுக முடிவெடுக்கும் என்று சொல்லப்படும் நிலையில், நாளை தேய்பிறையில் முதல்வர் வேட்பாளர் முடிவு அறிவிக்கப்படுமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், நாங்க எப்பவுமே ராகு காலம், எமகண்டமெல்லாம் பார்ப்பதில்லை. உங்களுக்கு இருக்கலாம். `All days are golden days.’ கடவுளுடைய படைப்பில் எல்லா நாளும் இனிய நாளே என்றார்.

மேலும், ஓ.பி.எஸ். , இ.பி.எஸ். தனித்தனி ஆலோசனை என்பது அண்ணன், தம்பிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.