திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே அழகிரியை ஸ்டாலின் ஓரங்கட்டிவிட்டார். அவர் மறைந்த பிறகு எப்டியாவது திமுகவுக்குள் அடி எடுத்து வைக்க அவர் தொடர் முயற்சியை எடுத்து வருகிறார். தன்னை சேர்த்துக் கொள்ள மன்றாடினார். தொண்டர்கள் தன் பக்கம் என மிரட்டிப் பார்த்தார். அமைதிப் பேரணி என திமுகவை அலறவிட்டார். ஆனால் எதுவுமே எடுபடவில்லை.

இப்போது திருவாரூர் இடைத்தேர்தல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். இதையோட்டி திருவாரூர் தொகுதியில், அழகிரிக்கு, எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை அறிய, 'சர்வே' நடத்தப்படுகிறது. 

அழகிரியின் மகன் தயாநிதி ஏற்பாட்டில், அந்த தொகுதியில், 'சர்வே டீம்' களமிறக்கப்பட்டு, ரகசிய கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இடைத்தேர்தலில், அழகிரியை நிறுத்துவதன் வாயிலாக, ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க.,வுக்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என, வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர் தொகுதியில், மறைந்த கருணாநிதி, இரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடக்கவுள்ள, திருவாரூர் இடைத்தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும் என, சென்னை, அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 தி.மு.க., சார்பில், மாவட்ட செயலர், பூண்டி கலைவாணனை, வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு நெருக்கடி கொடுக்கவும், கருணாநிதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறவும், அழகிரி விரும்புகிறார்.

அதனால், திருவாரூரில், அழகிரிக்கு உள்ள செல்வாக்கு மற்றும் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய, அழகிரியின் மகன் தயாநிதி ஏற்பாட்டில், சர்வே நடத்தப்படுகிறது.
திருவாரூர் தொகுதியில், அழகிரி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், 12 சதவீத ஓட்டுகள் தான் கிடைக்கும். ஆனால், அழகிரியே நேரடியாக போட்டியிட்டால், கருணாநிதி மகன், நட்சத்திர வேட்பாளர், ஒரு தலைவர் உருவாகுகிறார் என்ற முறையில், 45 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அழகிரி தனது , தந்தையின் தொகுதியில் போட்டியிடுவதில், ஆர்வமாகவும், உறுதியாகவும் உள்ளார். திருவாரூர் தொகுதியில், வெள்ளாளர் சமுதாய ஓட்டுகள், 20 சதவீதம் உள்ளன. இந்த சமுதாயத்தில் பெரும்பான்மையினர், நடிகர் ரஜினிக்கு ஆதரவாக உள்ளனர். அழகிரியும், ரஜினியும் நண்பர்கள் என்பதால், அழகிரி போட்டியிட்டால், அச்சமுதாய ஓட்டுகள், அவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும்,  ஆதிதிராவிடர் சமுதாய ஓட்டுகள், 33 சதவீதம் உள்ளன. அழகிரியின் மனைவி காந்தி, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆதி திராவிடர் ஓட்டுகளும் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

ஜாதி ரீதியிலான ஓட்டுகள் அடிப்படையில் பார்த்தாலும், அழகிரிக்கு கணிசமாக ஆதரவு கிடைக்கும் என்கிறது அழகிரி வட்டாரம். மேலும், தி.மு.க.,வில், ஸ்டாலினுக்கு தலைவர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அவரது மகனுக்கு, தி.மு.க., அறக்கட்டளையில் பதவி என, அதிகாரம் முழுவதும், ஸ்டாலின் குடும்பத்தினரிடம் உள்ளது. ஆனால், அழகிரி, நிராயுதபாணியாக உள்ளார். எனவே, அவருக்கு, கட்சியினரிடம் அனுதாபம் ஏற்படலாம் என்றும் ஒரு தரப்பு நம்புகிறது.

இப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும் என்கிறது அழகிரி தரப்பு. இது சரிபட்டு வருமா ? என தற்போது அழகிரி யோசிக்கத் தொடங்கியுள்ளார்