கடந்த 2014 ஆம் ஆண்டு அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பலமுறை முயன்றும் மீண்டும் திமுகவில் சேர முடியவில்லை. கருணாநிதி மறைந்த பிறகும் அவரை திமுகவில் சேர்த்துக் கொள்ள ஸ்டாலின் முன்வரவில்லை.

இதையடுத்து அவர் திமுகவுக்கு எதிராக சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் பேரணி ஒன்றை நடத்தினார். ஆனால் அதில் அவர் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை. இதையடுத்து அவர் தனி அணியாக செயல்படப் போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்று அழகிரி, திருவாரூர் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது  பேசிய மு.க.அழகிரி, திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலில், நான் போட்டியிட வேண்டும் என, பலர் கூறி வருவதாக  தெரிவித்தார்.

கருணாநிதியுடன், 2011ல், தேர்தல் பிரசாரத்தின் போது, திருவாரூருக்கு வந்தேன். தந்தை இறந்த  பின், தற்போது தான் வந்திருக்கிறேன். திருவாரூர் இடைத்தேர்தலில், நான் போட்டியிட வேண்டும் என, பலர் கூறி வருகின்றனர்; சிலர், அன்பு கட்டளை இடுகின்றனர்.அவர்களிடம், தேர்தல் வந்தால் பார்த்துக் கொள்வோம் என, கூறியுள்ளேன். ஏனெனில், இடைத்தேர்தலே வேண்டாம் என, மேலிடத்துக்கு, சிலர் கூறி வருவதாக தகவல்கள் வருகின்றன. 

இடைத்தேர்தல் நடந்து,நான் போட்டியிட்டால், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தொகையை கூட செலவு செய்யாமல், நான் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இடைத்தேர்தலில் ஓட்டு கேட்பேனோ, இல்லையோ; எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, மக்களிடம் நியாயம் கேட்பேன். என குறிப்பிட்டார்.

தனி கட்சி தொடங்கும் எண்ணமில்லை என்றும். கருணாநிதி வழியை பின்பற்றி, எதிர்காலத்தில் நடப்போம் என்றும் கூறிய அழகிரி,  ரஜினி, பாஜக, மற்றும் என்னை இணைத்து வரும் அரசியல் தொடர்பான செய்திகள் எல்லாம் வெறும் வதந்திகள் என்றார்.. 

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என, பல முறை கூறிவிட்டேன். அவர் களிடம் இருந்து, எந்த பதிலும் இல்லை. தமிழகத்தில் அரசியலும் சரியில்லை; ஆட்சியும் சரியில்லை என அழகிரி குற்றம்சாட்டினார்.