Akshara Hassan is Kamals Political heir
கிட்டத்தட்ட அரசியல் கட்சி துவங்கும் முடிவுக்கு வந்தேவிட்டார் கமல்ஹாசன். ’விருப்பத்தின் கீழ் இல்லாவிட்டாலும், அழுத்தத்தின் காரணமாக இந்த ரீதியில் சிந்திக்க துவங்கியிருக்கிறேன்.’ என்றிருக்கிறார்.
இந்நிலையில் கமலின் அரசியல் ஐடியாலஜிக்கு பின்னால் மிக வலுவான ஒரு இளம் பேக்போன் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அது வேறு யாருமல்ல, கமலின் இளைய மகள் அக்ஷராதான் என்கிறார்கள்.
கமலின் இரு மகள்களுக்கும் இடையில் வயதில் மட்டுமல்ல சிந்தனைகளிலும், கேரக்டரிலும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. மூத்தவரான ஸ்ருதி மிகவும் ஃப்ரீக்கியான கேர்ள். சினிமா, இசை, ஃபேஷன் என்று இருப்பவர். ஆனால் அக்ஷரா அப்படியில்லை. என்னதான் ஷமிதாப், விவேகம் என இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் கூட சினிமாவை தாண்டிய சில சிந்தனைகள அவருக்கு உண்டு.

அப்பா கமல் போலவே அடர்த்தியான இடது சாரி சிந்தனையை உடையவர் அவர் என்கிறார்கள். அதனால்தான் கமலின் குடும்ப நண்பர் ஒருவர் அக்ஷராவிடம் ஜாலியாக ‘அப்பா கூட ஒரு படம் பண்றதா இருந்தா, என்ன மாதிரி கதையை தேர்வு செய்வம்மா?’ என்று கேட்டதும், சற்றும் யோசிக்காமல் ’மாவோயிஸம் தொடர்பான கதை எங்களுக்கு செட் ஆகும். நான் போராளி, அப்பா எங்களோட போராட்ட நியாயத்தை புரிஞ்சிருக்கிற போலீஸ் அபீஸர். எப்டி இந்த கான்செப்ட், செமத்தியா இருக்கும்ல?” என்றாராம். இந்த பதிலை கேட்டு அந்த நண்பரை விட கமல்தான் அதிகம் அதிர்ச்சியாகியிருக்கிறார். ஆனால் ஆனந்தமாக.
கமலின் பொதுவெளி சிந்தனைகளை தொடர்ந்து வாட்ச் செய்து கொண்டிருந்த அக்ஷரா அவருக்கு அரசியல் தொடர்பான பல டிப்ஸ்களை, கருத்துக்களை அடிக்கடி உதிர்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். அது கமலின் உள் யோசனைகளோடு தொடர்ந்து ஒத்துப்போயிருக்கிறது. அதனால் கமலே ‘ஒருவேளை நான் அரசியல் கட்சி துவங்கினால் , அதன் டாக்ட்ரின்ஸ் (கொள்கைகள்) எப்படியானதாக இருக்கவேண்டும்? தயார் செய்து கொடு.’ என்று அக்ஷராவிடம் கேட்க, அவரும் ஒரு ரிப்போர்ட் தயார் செய்து கொடுத்திருக்கிறாராம். அதை ஊடுருவிப்பார்த்த கமல் புருவம் உயர்த்தியிருக்கிறார் ஆச்சரியத்தில். காரணம் அதில் கம்யூனிஸம், திராவிடம் உள்ளிட்ட எல்லா ஃபிளேவர்களுமே கலந்து இந்த மண்ணுக்கும், மக்களுக்கும், பாரம்பரியத்துக்கும், வளர்ச்சிக்கும், பொது நேர்மைக்கும் முழுக்க முழுக்க நியாயம் செய்யக்கூடியதானதாக இருந்திருக்கிறது.

ஆக கமலின் அரசியல் ஐடியாலஜியின் பின்னணியில் அக்ஷரா இருக்கிறார் என்று அழுத்திச் சொல்கிறது அந்த குடும்பத்தை நெருங்கி கவனிக்கும் தரப்பு. மேலும் அவர்கள் ’இதையெல்லாம் கேட்டுட்டு, கட்சியே துவங்காத கமலின் அரசியல் வாரிசா அக்ஷரா?-ன்னு எழுதிடாதீங்க. கமலின் அரசியல் சித்தாந்தங்களை வடிவமைக்கிற வாரிசுதான் அக்ஷரா! அப்படிதான் சரியாக எடுத்துக்கணும்.” என்று சொல்லி சிரிக்கிறார்கள் அர்த்தபுஷ்டியாக.
வெல்கம் டூ பிஹைண்ட் தி ஸ்கிரீன் பாலிடிக்ஸ் அக்ஷரா!
