எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குவதையே விரும்புவதாகவும், டி.டி.வி.தினகரன் அளித்த பதவி தேவையில்லை என தெரிவித்த எம்எல்ஏ ஏ.கே.போஸ், தற்போது சசிகலா சொன்னால் பொறுப்பேற்றுக் கொள்வதாக திடீர் பல்டி அடித்துள்ளார். 

அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த 122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக உள்ளார்.

இவருக்கு பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்,துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனை தீவிரமாக ஆதரிக்கும் எம்எல்ஏக்கள்  மற்றும் நிர்வாகிகள் சிலர் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை தெரிவித்துவருகிறார்கள்.

அண்மையில்  டி.டி.வி.தினகரன் திடீரென்று எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் என 60 பேரை  பல்வேறு பதவிகளுக்கு நியமித்தார்.

ஆனால்  சத்யா பன்னீர் செல்வம், பழனி, ஏ.கே.போஸ், கதிர்காமு ஆகியோர், டி.டி.வி.தினகரன் அறிவித்த பதவி தேவையில்லை என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் திடீரென பெரியகுளம் எம்எல்ஏ கதிர்காமு, தினகரன் அளித்த பதவியை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். 

இதனிடையே இன்று செய்தியாளகளிடம் பேசிய, ஏ.கே.போஸ் எம்எல்ஏ, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சொன்னால், தனக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அதிரடியாக தெரிவித்துள்ளார்.