மகாராஷ்டிரா மாநிலத்தில்  பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. இதைடுத்த சில மணி நேரங்களில் முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிசும், துணை முதலமைச்சர்  அஜித் பவாரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, மகாராஷ்டிரா சட்டசபை இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இதைத்தொடர்ந்து, நாளை காலை 8 மணிக்கு மகாராஷ்டிரா சட்டசபை கூடுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக  உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின.

இந்நிலையில், மும்பையில் உள்ள சில்வர் ஓக் பகுதியில் அமைந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வீட்டுக்கு அஜித் பவார் இன்று இரவு திடீரென சென்றார். அங்கு அவர் சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலேவை சந்தித்து பேசினார்.

மகாராஷ்ட்ராவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பத்துக்க காரணமே அஜித் பவார்தான். தேதியசவாத காங்கிரஸ் சட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக இருந்த அஜித் பவார் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. மேலும் அஜித் பவார் பாஜகவுடன் உறவு வைத்திருந்ததன் பின்னணியில் சரத்பவார் உள்ளார் என்றும் கூறப்பட்டது. 

இதனிடையே  பிரச்சனைகள் முடிந்துவிட்ட நிலையில் சரத் பவார்- அஜித் பவார் சந்திப்பு தேசியவாத காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.