திருப்பூரில் பாஜகவில் இணைந்ததாகக் கூறப்பட்ட அஜித் ரசிகர்கள், ’கட்சியில் சேரவே இல்லை’ எனக்கூறி தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.   

திருப்பூரில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை முன்னிலையில் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின. அப்போது பேசிய தமிழிசை, ‘’தமிழகத்தில் தாமரை மலர அஜித் ரசிகர்கள் உதவ வேண்டும். மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டது வைரலாக பரவியது. இதனால் அதிர்ச்சியான அஜித் 8 ஆண்டுகளுக்கு பின் அதிரடியாக அறிக்கை வெளியிட்டார். 

அதில், ’’நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்து திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன். என் ரசிகர்கள் மீதும், ரசிகர்கள் இயக்கங்களின் மீது எந்தவிதமான அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்று நான் சிந்தித்ததின் சீரிய முடிவு தான் அது’’ என அஜித் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பாஜகவில் இணைந்ததாக கூறப்பட்ட அஜித் ரசிகர் அதிரடியாக வெளியிட்டுள்ள விளக்கம் பாஜகவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜகவில் இணைந்ததாக கூறப்பட்ட அஜித் ரசிகர் ஹரி அஜித் வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பேசும் ஹரி `பாஜகவில் உள்ள மோதிலால் என்னுடைய நண்பர். எங்களுக்காக நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். அவர், தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு என்னை வருமாறு அழைத்திருந்தார். எனவே, நட்பு அடிப்படையில் நான் ஒரு விருந்தினராக மட்டுமே அந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன்.

அஜித் ரசிகரான நாங்கள் பி.ஜே.பி-யில் இணைந்துவிட்டோம் என்பது தவறான தகவல்" எனத் தெரிவித்துள்ளார். அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாக அக்கட்சியின் தலைவர் தமிழிசை கூறியிருந்த நிலையில், கட்சியில் இணைந்ததாக கூறப்பட்டவர் இணையவே இல்லை’ என மறுத்துள்ளது பாஜகவினரை கதிகலங்க வைத்துள்ளது.