AIIMS doctors wrote letter to Prime Minister
எய்ம்ஸ் மருத்துவமனையில் மோசமான கட்டமைப்பு வசதிகள், சுகாதார முறை தரம்தாழ்ந்து போவது குறித்து பிரதமர் மோடிக்கு வருத்தம் தெரிவித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் ரெசிடென்ட் டாக்டர்ஸ் அசோசியஷன்(ஆர்.டி.ஏ.) கடிதம் எழுதியுள்ளனர்.
எங்களின் பணியின் அழுத்தத்தை நீங்கள் உணர நீங்கள் உடையை அணிந்து, எங்களுடன் பணியாற்றினால் புரியும் என்று கடிதத்தில் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு கோரியும், பதவி உயர்வு கோரியும் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால், பல டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அடுத்த 3 மாதங்களுக்கு ராஜஸ்தான் மாநில அத்தியாவசிய பணிச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்ய தடை விதித்துள்ளது.

இதையடுத்து, ரெஸிடன்ட் டாக்டர்கள் அசோசிஷேன் அமைப்பினர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர் கடிதத்தில் கூறியுள்ளதாவது -
உங்களைப் போன்ற சுறுசுறுப்பாக செயல்படும் பிரதமர் கிடைத்ததை நினைத்ததை பெருமைப்படுகிறோம். இப்போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் நாங்கள் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறோம். எங்களின் வெள்ளை அங்கியை அணிந்து எங்களுடன் இணைந்து ஒருநாள் பணியாற்றினால், நாங்கள் எத்தகைய பணிஅழுத்தத்தை சந்திக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், முறையான சுகாதார முறைகள் இல்லாததால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை.

ஆனால், சில அமைச்சர்கள் சுயவிளம்பரத்துக்காக தரம் தாழ்ந்த குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். நாங்கள் கடந்த 16-ந்தேதி ராஜஸ்தானில் போராட்டம் நடத்தியபோது, 86 டாக்டர்களை ரெஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்தது. முதலில் எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மாநில அரசு இப்போது மறுக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
