2021ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆரூடம் சொல்லியிருக்கிறார்.


இது குறித்து பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில்.. 

"கோவையில் 3 இடங்களில் ஒரே இரவில் கோயில்களில் அம்மனுக்கு போர்த்தப்பட்ட சேலை மற்றும் இதர கோயில் பொருட்கள் எரிந்துள்ளன. ஆனால், காவல்துறையினர் ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவர் இதை செய்துள்ளார் என்று ஒருவரை கைது செய்திருக்கிறார்கள்.அதிமுக. அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளித்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். 


கோவையில் நடைபெறும் பயங்கரவாதத்தை, ஆரம்பத்திலேயே கிள்ளி எறியவேண்டும். பா.ஜ. பிரமுகர்கள் கடை எரிப்பு, கார் எரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் உண்மை குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பல வருடங்களுக்கு முன்பு கொலைசெய்யப்பட்ட பா.ஜ. பிரமுகர் ரமேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகள் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை. கடந்த காலங்களில் நடந்த பயங்கரவாதம்போல் தற்போதும் தலைதூக்க விடக்கூடாது.  யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடுவதற்கு தமிழக பா.ஜ. தயங்காது. தேர்தலில் வெற்றி பெறுவது பா.ஜ.விற்கு இரண்டாவது சிந்தனை. முதலில், மக்களின் பாதுகாப்பே முக்கியம். இந்துக்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். அவர் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை தழுவும்.