அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தையில், கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்பட்டு விரைவில் இணையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக அரசியல் கலத்தில் அதிமுக இணைப்பு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த இரு அணிகளும் இணைவது குறித்து நேற்று செய்திகள் வெளியானது. 

எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு, ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று, பின்னர் இணைப்பு குறித்து தகவல் வெளியாகும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து ஜெ சமாதியில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. காரணம் பிரிந்த இடத்திலேயே ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகியது. 

ஆனால், அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அணிகள் இணைப்பு இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறும் ஒன்று கூட்டத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விரைவில் அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்றார்.

பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும், பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடு சரி செய்யப்படும். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை ஜெயலலிதா சிறப்பாக வழி நடத்தி கொண்டு சென்றிருக்கிறார்.

மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் விமர்சனம் தவறானது. கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு நீதிமன்றத்தில் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.