இபிஎஸ்க்கு சி.எம் பதவியை முன்பே ஜெயலலிதா கொடுத்திருந்தால்..! என்ன நடந்திருக்கும் தெரியுமா...? கோவை செல்வராஜ்
50 ஆண்டுகளாக இயங்கி வரும் அதிமுகவை சுமார் 4 ஆண்டுகள் மட்டும் முதலமைச்சர் பதவியில் இருந்து விட்டு கட்சியையே கைப்பற்ற இபிஎஸ் திட்டமிடுவதாக அதிமுக மூத்த நிர்வாகி கோவை.செல்வராஜ் விமர்சித்துள்ளார்
ஆதரவாளர்களோடு ஓபிஎஸ் ஆலோசனை
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவு பட்டுள்ளது. இந்தநிலையில் உயர்நீதி மன்ற தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்த நிலையில் ஓபிஎஸ் உற்சாகமாக உள்ளார். இதனையடுத்து சென்னையில் தனது ஆதரவார்களை சந்தித்த ஓபிஎஸ் தனது சொந்த மாவட்டமான தேனிக்கு சென்றுள்ளார். அங்குள்ள கோயில்களில் சிறப்பு வழிபாட்டிலும் ஓபிஎஸ் கலந்து கொண்டார். இந்தநிலையில் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து இருந்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார். இதே போல அதிமுக மூத்த நிர்வாகியான கோவை செல்வராஜ தனது ஆதரவாளர்களோடு ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். அப்போது தங்கள் பகுதிக்கு சுற்றப்பயணம் வர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம், பேசிய கோவை செல்வராஜ், அதிமுகவின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்த நிலையிலும் தனது சுய நலத்திற்காக அந்த பதவி செல்லாது என இபிஎஸ் கூறுவதாக குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதாவிற்கே துரோகம் .?
தனது ஆதரவாளர்களை வைத்து பொதுக்குழு கூட்டுவதாக கூறி தன்னை தானே இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் அறிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து தான் நீதிமன்றம் சென்றதாக கோவை செல்வராஜ் கூறியுள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பில் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து தான் திறந்த மனதோடு மீண்டும் ஒன்றினைந்து செயல்படுவோம் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஆனால் இதனை இபிஎஸ் தனது சுயநலத்திற்காக ஏற்க மறுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். 50 ஆண்டுகளாக இயங்கி வரும் அதிமுகவை சுமார் 4 ஆண்டுகள் மட்டும் ஆட்சியில் இருந்து விட்டு கட்சியையே கைப்பற்ற இபிஎஸ் திட்டமிடுவதாக தெரிவித்தார். ஓபிஎஸ் துரோகி என இபிஎஸ் கூறுகிறார். ஆனால் சசிகலா காலில் விழுந்து பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி தான் துரோகி என விமர்சித்தார். மூன்று முறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா கொடுத்தார். மீண்டும் அந்த பதவியை திரும்ப ஒப்படைத்தார். ஆனால் தற்போது உள்ள நிலையில் இபிஎஸ்க்கு ஜெயலலிதா முதலமைச்சர் பதவி கொடுத்திருந்தால் அவருக்கே இபிஎஸ் துரோகம் செய்திருப்பார் என கோவை செல்வராஜ் குற்றம்சாட்டினார்.